Tuesday, November 29, 2011

வரலாற்றை மோசடி செய்யும் மயிலாடுதுறை கிளைஃபிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி

வரலாற்றை மோசடி செய்யும்
மயிலாடுதுறை கிளைஃபிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி

தமிழகத்தின் தொன்மையும் வரலாற்று சிறப்பும் கொண்ட சில ஊர்களில் மயிலாடுதுறையும் ஒன்று. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்கள் இந்தப் பகுதிகளில் கால்நடையாகவே பல ஓலைச் சுவடிகளைச் சேகரித்து தமிழ்மொழிக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார் என்பது வரலாற்று உண்மை.
கடந்த நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, திருவிடைமருதூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளைச் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகளோடு இணைத்து இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி என்று அழைக்கப்படும் என்று அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மணிசங்கர் அய்யர் அவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மயிலாடுதுறை மக்கள் கொதித்து எழுந்து பல அறப்போராட்டங்களை நடத்தினர். தமிழ்த்திணை இணைய இதழ் மயிலாடுதுறையின் வரலாற்று பெருமையைப் பட்டியலிட்டு மயிலாடுதுறை என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதி இருக்கவேண்டும் என்பதை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களுக்குத் தெரிவித்தது. அதன் பலன் மீண்டும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அறிவிக்கப்பட்டது. இது தற்போதைய வரலாறு.
மயிலாடுதுறையில் 27.11.2011ஆம் நாள் பிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி தன் கிளையைத் தொடங்கியது. இதற்கான அழைப்பிதழ் இரண்டு நாட்களுக்கு முன்பே நகரம் முழுவதும் அஞ்சல் துறையால் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டன. அதில் மயிலாடுதுறை என்பது மைலாடுதுறை என்று குறிப்பிடப்பட்டிருந்து.
நகரில் வைக்கப்பட்ட விளம்பரங்கள்


ஆனால் இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட திறப்புவிழா அழைப்பிதழில் மயிலாடுதுறை என்று சரியாகவே இருந்தது.

இல்லங்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ்

27.11.2011ஆம் நாள் காலை 11.00 மணியளவில் தமிழ்த்திணையின் ஆசிரியர், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் பிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் வாடிக்கையாளர் சேவைமைய எண் – 9486525252 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்களின் நிறுவனம் வைத்துள்ள விளம்பரத்தில் மைலாடுதுறை என்று குறிப்பிட்டிருப்பது வரலாற்றை மாற்றம் நோக்கம் கொண்டதாக உள்ளது. மயிலாடுதுறை என்றிருந்த இந்த ஊர் பார்ப்பனர்களின் சமஸ்கிருதமயமாக்கலில் மாயூரபுரம் என்றாகி பின்னர் மாயூரம் என்றாகி பின்னர் 1948இல் மாயவரம் என்று நிலைபெற்றது. மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும் 1980இல் மாயவரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.கிட்டப்பா அவர்களின் முயற்சியால் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் இருந்த அரசு 1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள் பழந்தமிழ் பெயராகிய மயிலாடுதுறை வழக்கிற்கு வருகிறது என்று அரசாணை வெளியிட்டது. இதன் தொடர்பாக மாயவரத்தில் நடைபெற்ற பெருவிழாவில் இதற்கான ஒரு கல்வெட்டு திறக்கப்பட்டது. அந்த கல்வெட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பில் உள்ளது. அதன் படமும் விளக்கமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

12ஆம் நூற்றாண்டு வரை மயிலாடுதுறை என்றிருந்த பெயர் மாயூரபுரம் என்றாகி, மாயூரம் என மருவி, 18ஆம் நூற்றாண்டில் மாயவரம் எனவும்,
1948-இல் மாயூரம் எனவுமாகி இப்பொழுது மீண்டும் பழந்தமிழ் பெயராகிய மயிலாடுதுறை
என்ற முதற்பெயர் வழக்கிற்கு வருவதையொட்டி
தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர்
மாண்புமிகு திரு.எஸ்.டி.சோமசுந்தரம்,
தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர்
மாண்புமிகு திருமதி கோமதி சீனிவாசன்,
தமிழ்நாடு நிதிதுறை அமைச்சர்
மாண்புமிகு டாக்டர் நாவலர் திரு.இரா.நெடுஞ்செழியன்
பெயர் மாற்றத்தினைச் செயல்முறைப்படுத்த
வள்ளுவராண்டு 2013 தந்துபி, ஆனித் திங்கள் 13-ஆம் நாள் (27.6.1982)
நிகழ்ந்த பெருவிழாவன்று நிறுவப்பட்ட கல்.
திரு. மெய்கண்டதேவன் இஆப,
மாவட்ட ஆட்சித்தலைவர், தஞ்சாவூர்.
வேற்று மாநிலங்களிலிருந்து பிழைப்பு நடத்தவருவோர் தமிழ் அடையாளங்களை மாற்ற நினைப்பது அல்லது அழிக்க நினைப்பது என்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது.

தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன்

Friday, August 26, 2011

தூக்குத் தண்டணையை இரத்து செய் - மயிலாடுதுறையில் மனித சங்கிலி 26.08.2011

மயிலாடுதுறையில் மரண தண்டணை எனப்படும் தூக்குத் தண்டணையை இரத்து செய்யக் கோரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் தி.க. மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொதுமக்கள் என பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள் - தமிழ்த்திணை நிலவன்

Saturday, August 06, 2011

சோழநிலா நேரலை

Watch live streaming video from cholanila at livestream.com

Monday, August 01, 2011

தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - நாக.இரகுபதி உரை

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி - 8

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -7

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -6

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி- 5

தமிழ்த் தேசியம் ஏன்? தமிழ்நம்பிஅறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி -4

தமிழ்த்தேசியம் ஏன்? தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி-3

தமிழ்த் தேசியம் ஏன்? தமிழ்நம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன் - பகுதி-2

தமிழ்நம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - முனைவர் கு.அரசேந்திரன்- பகுதி - 1

Sunday, July 17, 2011

தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)



தமிழ்த் தேசியம் ஏன் - தமிழ்நம்பி அறக்கட்டளைச் சொற்பொழிவு(மயிலாடுதுறை - 16.07.2011)

மயிலாடுதுறை தமிழ் ஆர்வலர், சித்தமருத்துவ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியர் மறைந்த தமிழ்நம்பியின் 4ஆம் ஆண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழ்வேழம் நாக.இரகுபதி அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரை திரு.மாரி. பன்னீர்ச்செல்வம் ஆற்றினார். பேராசிரியர் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் முன்னிலை ஏற்றார். சித்தமருத்துவச் சங்க மயிலாடுதுறைத் தலைவர் ச.சுப்பையன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்த்தேசியர், வேர்ச்சொல் ஆராய்ச்சியாளர், சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு சொற்பொழிவாளரை அவைக்கு அறிமுகம் செய்து தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் வே.இரா.பூபதி. இரா.சுரேஷ், விழிகள் இராஜ்குமார் ஆகியோர் கவிதைப் பொழிவு நிகழ்த்தினர். மேலும் மறைந்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறித்த நினைவேந்தல் உரையை ஏவிசி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் கி.இரா.சங்கரன் மற்றும் முனைவர் பரமேஸ்வரி ஆகியோர் ஆற்றினர். மயிலாடுதுறை கல்வி வட்டத்தில் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களைப் பாராட்டி, திருமதி புவனேஸ்வரி தமிழ்நம்பி அவர்கள் பரிசுத் தொகையும் நூல்களையும் வழங்கினார். இறுதியில் தமிழ்ஆர்வலர் திரு.ந.கலியபெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள், தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, ஏவிசி கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு சிறப்பாக நடத்தினார்.

ஒளிப்படங்கள் - தமிழ்த்திணை(www.tamilthinai.com)

Wednesday, July 06, 2011

தமிழ்த்திணை - சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் - இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் - 4ஆம் கருத்தரங்கம் - அறிவிப்பு அழைப்பு மடல்

தமிழ்த்திணை (www.tamilthinai.com) சார்பு அமைப்பு
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்



இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்
4 - ஆம் கருத்தரங்கம்
அறிவிப்பு – அழைப்பு மடல்



2011 நவம்பர் திங்களில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ச்சி நடைபெறும்.
நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்


கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் – அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.



- கருத்தரங்க அமைப்புக் குழு



அன்புடையீர், வணக்கம்.
தமிழ்த்திணையின் சார்பு அமைப்பான சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்கம் இலக்கிய வளர்ச்சியில் தமிழ் இதழ்கள் (சிற்றிதழ்களும் அடங்கும்) என்னும் பொருண்மையில் நடைபெறவுள்ளது. இக் கருத்தரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் ஏ4 பக்கஅளவில் 5 பக்கத்திற்குள் அமைந்திருக்க வேண்டும். கட்டுரைகளைத் தமிழ் யூனிக்கோடு வழி கணினியில் தட்டச்சு செய்ய, NHM Writer என்னும் மென்பொருளை விண்டோ 2000 அல்லது XP இயங்குதளத்தில் நிறுவவேண்டும். லதா எழுத்துரு அல்லது யூனிக்கோடு எழுத்துருவில் கட்டுரைகளை அமைத்துக் கொள்ளலாம். தயார் செய்யப்பெற்ற கட்டுரைகளை tamilthinai@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில், அனுப்பி வைக்கவேண்டும். அஞ்சல் வழி கட்டுரைகளை அனுப்பி வைப்போர் குறுந்தகட்டில் பதிவு செய்து அனுப்பி வைக்கவேண்டும்.

பேராளர் கட்டணம் ரூ.500/- ஆய்வாளர்களுக்கு ரூ.300/- ஆகும். இக் கட்டணத்தை பணவிடை(M.O.) வழியாக அல்லது தமிழ்த்திணை (TAMILTHINAI) என்னும் பெயரில் வரவோலையாக அல்லது தமிழ்த்திணை – இந்தியன் வங்கிக் கணக்கு எண் : 497781951இல் நேரடியாகவும் தொகையைச் செலுத்தலாம்.

கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 31.10.2011

ISBN எண் பெறப்பட்டு, கட்டுரைகள் அடங்கிய ஆய்வுத் தொகுப்பு கருத்தரங்க நாளின்போது வெளியிடப்படும். ஆய்வுக் கட்டுரைகள் மின்நூலாக்கம் செய்யப்பட்டு தமிழ்த்திணை இணைய தளத்திலும் வெளியிடப்படும். மேலும் ஆய்வுத் தொகுப்பு குறுந்தகடு வடிவில் பேராளர்களுக்கு வழங்கப்படும். இவ் வாய்வுக்குக் கோவைக்கு முதன்மைப் பதிப்பாசிரியராக இதழியல் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற முனைவர் ம.இளையராஜா (தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, அரியலூர்) செயல்படுவார். அலைபேசி : 9842057123
கட்டுரைகள் மற்றும் பேராளர் தொகை அனுப்பி வைக்கவேண்டிய முகவரி: ஆசிரியர், தமிழ்த்திணை அல்லது தலைவர், சி.பா.ஆதித்தனார் அ.இ. இதழியல் கழகம், 43, செண்பகம் தெரு, பெசண்ட் நகர், மயிலாடுதுறை – 609 001. அலைபேசி : 9443214142.
நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள விரும்புவோர் விருந்தினர் தொகை ரூ.250/- செலுத்த வேண்டும்.
கருத்தரங்கம் குறித்த அனைத்து விவரங்களும் www.tamilthinai.blogspot.comஎன்னும் வலைப் பூவில் வெளியிடப்படும். கருத்தரங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையம் வழி நேரலையாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும். இதனை www.livestream.com மற்றும் www.tamilthinai.blogspot.com இணைய தளங்களில் பார்க்கலாம்.




பேராளர் படிவம்

பெயர் :
பதவி :
பணியிட முகவரி :







இல்ல முகவரி :




உடன் வருவோர் எண்ணிக்கை :

பேராளர் தொகை செலுத்தப்பட்ட விவரம் :





கையொப்பம்

விரும்பும் உணவு – தேர்வு செய்க

சைவம் அசைவம்



கருத்தரங்க அமைப்புக் குழு

முனைவர் கு.அண்ணாதுரை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
(நெறியாளர்)

கட்டுரை தெரிவுக் குழு

முனைவர் அரங்க. மல்லிகா(எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை)
முனைவர் கி.சுமதி(ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை)
முனைவர் இரா.கலைவாணி(அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோவை)
முனைவர் விஜயராணி(பிஷப்ஹீபர் கல்லூரி, திருச்சி)

அமைப்புக் குழு

முனைவர் தி.நெடுஞ்செழியன்
பேரா.வே.கண்ணையன்
முனைவர் மு.அருணாசலம்
முனைவர் கா.வாசுதேவன்
முனைவர் ம.இளையராஜா
முனைவர் உ.பிரபாகரன்
முனைவர் ஜானகிராமன்
திருச்சி மா.சரவணன்
தமிழ்ச்சுடர் தி.அன்பழகன்
முனைவர் துரை.மணிகண்டன்
பொறி. க.பட்டாபிராமன்
ஆய்வாளர்கள்
திரு.பூ.வெற்றிவேலன்
திரு.ச. கனகசபை
திருமதி. மா. மகாலெட்சுமி
திரு. ஆனந்தன்

ஆய்வுக் களங்கள்
சிறுகதை, நாவல், கவிதை – மரபு கவிதை, புதுக்கவிதை, நாடகம், போன்ற பல்வேறு இலக்கிய வகைகளின் வளர்ச்சிக்கு உதவும் இதழ்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். தனி இதழ்கள், ஒவ்வொரு இலக்கிய வளர்ச்சிக்குதவும் இதழ்கள் குறித்து வரலாற்று நோக்கிலும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரை அளிக்கலாம். இதில் தனிச்சுற்று இதழ்கள், வளாக இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் இவற்றையும் ஆய்வுப் பொருளாகக் கொள்ளலாம். தமிழகம், தென்னிந்தியா, வடஇந்தியா என உலகம் முழுவதும் உள்ள இலக்கிய இதழ்கள், இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் இதழ்கள் என எல்லா இதழ்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி கட்டுரை வரையலாம்.

Tuesday, July 05, 2011

மயிலாடுதுறையில் வள்ளுவர் கோட்டம் - 03.07.2011- திறப்பு


தமிழறிஞர் ச.தண்டபாணிதேசிகர் பெயரன் பொறியாளர் நா.இமயவரம்பன் அவர்கள் மயிலாடுதுறை விசித்திராயர் வீதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார். தன் இல்லத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலையையும் அமைத்துள்ளார். இதன் திறப்பு விழா 03.07.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவிற்குச் செந்தமிழ் அருவி முனைவர் கி.செம்பியன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் கோ.நீலகண்டன் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏவிசி கல்லூரி முன்னை முதல்வர் முனைவர் மு.வரதராசன், புலவர் சி.பன்னீர்செல்வம் டி.எஸ்.தியாகராஜன், இரா.செல்வநாயகம் போன்ற ஆன்றோர்கள், சான்றோர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத் துறைப் பேராசிரியர் குடியரசு தலைவரிடம் செம்மொழி விருது பெற்ற முனைவர் இரா.கலைவாணி அவர்கள் அன்புடமை, விருந்தோம்பல் அதிகாரத்தை இசைக் கூட்டி பாடினார். முனைவர் கோ.இரவிசெல்வம் நன்றி கூறினார். இவ்விழாவில் தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Thursday, June 02, 2011

பெல்ஜியத்தில் வைகோ வீரமுழக்கம் - 2

பெல்ஜியத்தில் வைகோவின் வீரமுழக்கம் - 1

இனப் படுகொலை: ஐ.நா. தன் கடமையைச் செய்யவில்லை-பெல்ஜியத்தில் வைகோ உரை


மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா சாக்ரடீஸ், திருச்சி, கீழக்கல்கண்டார்கோட்டை மதிமுக கிளைச் செயலர் இ.செல்வா இவர்களுடன் வைகோ

பெல்ஜியத்தில் வைகோ உரை

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் 01.06.2011ஆம் நாள் நடந்தது.


பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.

இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.

இந்த அமர்வில் ஒவ்வொருவரும் பேச தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வைகோவுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ 18 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்.

வைகோ உரை விவரம்:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும், ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

எங்கள் ஈழத் தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை, நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்?.

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நோர்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்து விட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?.

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன்பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?.

அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான். வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அங்கே இங்கிலாந்து அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து, யுத்தக் களத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரவலாற்றுக் கட்டாயமாயிற்று.

இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். ஒரேயொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னதில்லையே?. அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?. இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களோ? அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?.

ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

என் உரையை முடிக்கும்போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

கல்லறைகள் திறந்து கொண்டன
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

இவ்வாறு வைகோ உரையாற்றினார்.

ஜெர்மனியின் டுவிஞ்சன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஜான் பீட்டர் நீல்சன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஹெய்டி ஹெளடாலா, இலங்கையைச் சேர்ந்த சிங்களத் தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீநாத் பெரைரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜா, இலங்கை வழக்கறிஞர் சங்கச் செயற்குழு உறுப்பினர் கனகசபை சண்முகரத்தினம்,

உலகத் தமிழர் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ ரஞ்சன், போர் நடைபெற்றபோது ஈழத்தில் மருத்துவமனையில் செவிலியராக இருந்த தமிழ்வாணி ஞானக்குமார், லண்டனைச் சேர்ந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் அம்மையார்,

பிரான்ஸ் தமிழ் ஈழ மக்கள் அவையின் உறுப்பினர் திருசோதி, பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக வாகீசன், தமிழர் ஒருங்கமைப்பு இயக்கத்தின் சார்பாக சாரா எல்ரிட்ஜ் அம்மையார் ஆகியோரும் இந்தக் கருத்தரரங்கில் உரையாற்றினர்.

நன்றி - One India Tamil

Sunday, May 01, 2011

வைகோவுக்குப் பாராட்டு விழா - 26.04.2011 - இராஜா அண்ணாமலை மன்றம், சென்னை

தமிழீழம் சென்ற பெருஞ்சித்திரனார் பெயர்த்தி வழக்கறிஞர் கயல்(எ) அங்கையற்கண்ணி அவர்களை சிங்கள இராணுவம் கைது செய்தது. இந்தச் செய்தியறிந்த வைகோ அவர்கள் இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து கயலை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் கயல் விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலைக்கு உதவியாக இருந்த வைகோவுக்கு உயர்நீதிமன்ற தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் பாராட்டு - நன்றி தெரிவிக்கும் விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. நகர்வு ஒளிப்படங்கள் படமாக்கம் - முனைவர் தி.நெடுஞ்செழியன்

Saturday, April 02, 2011

செந்தமிழன் சீமான் உரை - 3

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் - செந்தமிழன் சீமான்-மயிலாடுதுறை(01.04.2011)

காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளிக்காதீர்கள் - நாம் தமிழர் கட்சி பரப்புரை

ஈழத்தமிழருக்கு இரண்டகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நாம்தமிழர் கட்சியின் பரப்புரை 01.04.2011ஆம் நாள் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.அதன் காணொளி - படமாக்கம்- முனைவர் தி.நெடுஞ்செழியன் - தமிழ்த்திணைக்காக

Friday, April 01, 2011

செந்தமிழன் சீமானின் சங்கநாதம் - ஒளிப்படங்கள்- மயிலாடுதுறை(01.04.2011)

ஈழத்தமிழர்களுக்கு இரண்டகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் - மயிலாடுதுறையில் செந்தமிழன் சீமானின் சங்கநாதம்
ஒளிப்படங்கள் - நிலவன் தமிழ்த்திணை

Sunday, March 27, 2011

சாரங்கபாணி வீடியோ 5

செம்மொழி ஆய்வு நிறுவன ஆய்வாளர் முனைவர் கோ.அதியமான், தமிழர் உரிமை இயக்கம் பேராசிரியர் முரளிதரன் - உரை

சாரங்கபாணி நினைவு நாள் - செல்வி ஏழிசைப்பாவை நடனம்

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு, கோவை அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழக இசைத்துறை இணைப்பேராசிரியர் இசைவாணி முனைவர் கலைவாணி இவர்களின் புதல்வி செல்வி ஏழிசைப்பாவை. இவர் தற்போது மயிலாடுதுறை அருட் சின்னபர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Monday, March 21, 2011

சாரங்கபாணி நினைவுநாள் - வீடியோ2

முனைவர் சு.தமிழ்வேலு, முனைவர் கி.செம்பியன் - உரைகள்

Tuesday, March 15, 2011

இந்தி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் விழா - மயிலாடுதுறை -15.03.2011

இந்தி மொழி எதிர்ப்பு ஈகி மாணவர் சாரங்கபாணி நினைவுநாள் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் செம்மொழி நிறுவன ஆய்வு நெறியாளர் அரணமுறுவல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஏவிசி கல்லூரி முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி.செம்பியன், தமிழ்வேழம் நாக.இரகுபதி மற்றும் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ்மரபு அறக்கட்டளை-பாராட்டு விழா-தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 03.03.2011ஆம் நாள் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமிகு சுபாஷினி அவர்கள் கலந்துகொண்டார். அதன் காணொளித் தொகுப்பு
நன்றி - தமிழ்த்திணை- படமாக்கம் - முனைவர் தி.நெடுஞ்செழியன்

AUT - கல்வி சார் கருத்தரங்கம் - கோயமுத்தூர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்(பதிவு)
கல்விசார் ஆண்டு கருத்தரங்கம் - கோயமுத்தூர்
நகர்வு ஒளிப்படங்கள்

Thursday, January 06, 2011

மீனகம்

meenagam