Wednesday, July 28, 2010

செம்மொழி மாநாடு செய்தது என்ன ?

---- தமிழேந்தி


செம்மொழி மாநாடு என்ன கிழித்தது
திரும்பவும் கலைஞரின் குடும்பமே செழித்தது
(செம்மொழி)

வெட்டியாய் முந்நூற்று எண்பது கோடியைக்
கொட்டிக் கரைத்த குடும்பத் திருவிழா
பொட்டுப் பூச்சியாய் வாழும் தமிழனை
முட்டாள் ஆக்கி முடித்த பெருவிழா
(செம்மொழி)

மகனொரு பக்கம் மாநாட்டைத் திறந்தார்
மகளோ தானே எல்லாமாய்ப் பறந்தார்
மனைவியர் மருமக்கள் பேத்தியர் இருந்தார்
மற்றுள்ள சொந்தங்கள் முன்வரிசை நிறைந்தார்
(செம்மொழி)
பாட்டால் புகழப் பாவலர் ஒருபுறம்
பல்லக்குத் தூக்கும் பேச்சாளர் மறுபுறம்
கேட்டுக் கேட்டு மு.க. மனம்மிகக் குளிரும்
கேட்டநம் வயிறோ தீப்பற்றிக் கருகும்
(செம்மொழி)

விருந்திட்ட இடத்தைக் கூட்டம் பிய்த்தது
வெளிஆய்வு அரங்கை ஈக்கள் மொய்த்தது
இருந்த தமிழ்நிலை நெஞ்சினைத் தைத்தது
"எழும்"இந்த இனம் என்றஎண்ணம் பொய்த்தது
(செம்மொழி)

பள்ளியில் நம்தமிழ் கட்டாயமி ல்லை
அறமன்றப் படிகளைத் தமிழ்தொட்ட தில்லை
கல்வியில் உயர்நிலை தமிழ் எட்டவில்லை
கரைத்த பணத்துக்கு முழுப்பயன் இல்லை
(செம்மொழி)

பேருக்கு ஈழத் தமிழர்க்காய் அழுகை
பெருங்கேடன் தில்லிக்கே கைகட்டித் தொழுகை
யாருக்கும் பெருநன்மை கூட்டாத கூட்டம்
யாருடைய ஆட்சிதான் தமிழ்த்துயர் ஓட்டும்?
(செம்மொழி)

Tuesday, July 27, 2010

JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்(27.07.2010)





JAC 8 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏவிசி கல்லூரி வாயில் முன்பு முழக்கப் போராட்டம்

கல்லூரி ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டு நடடிவக்கைக் குழு எடுத்த முடிவின்படி, தமிழக அரசு மற்றும் உயர்கல்வித் துறையை வலியுறுத்தி மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயில் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏவிசி கிளைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவராமன் தலைமை தாங்கினார். அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மடாநிலப் பொறுப்பாளர் இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். 8அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தொடக்கவுரை ஆற்றினார். போராட்டத்தில் 8 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. 1.1.2006 முதல் பணப்பயனையும் நிலுவைத் தொகை வழங்கிடுக.
2.ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்திடுக.
3. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் படிகளையும் ஆசிரியர்,அலுவலர்களுக்கு வழங்கிடுக.
4.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுக. வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.
5.முன்கூட்டியே பெறும் ஓய்வூதிய பணத்தின் அளவை 40 விழுக்காடாக உயர்த்திடுக.
6.பணிமூப்பில் இளையோர் பணிமூப்புடையோரைவிட அதிக ஊதியம் பெறும் முரண்பாடுகளை களைந்திடுக.
7.முழுஓய்வூதியம் பெற்றிட 30 ஆண்டுகள் என்றிருப்பதை 20 ஆண்டுகள் எனக் குறைத்திடுக.
8.அரசு,அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்பிடுக.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முனைவர் இராமசாமி, முனைவர் செல்வநாதன் அலுவலர் சங்கதின் பொறுப்பாளர்கள் கமலமுருகன், கமலநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியில் முனைவர் எம்.மதிவாணன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறையிலிருந்து நிலவன்