Thursday, April 29, 2010

மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இரயில் சேவை தொடங்கியது






கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என நான்கு மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி மக்களின் பல ஆண்டு கனவு இன்று நிறைவேறுகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப் பட்டுள்ள அகல ரயில் பாதையில் இன்று (23.04.2010)முதல் ரயில்கள் ஓடும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில் சேவை 1853ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 1856ம் ஆண்டு, 'சென்னை ரயில்வே கம்பெனி' என்ற பெயரில் தென்னக ரயில்வே துவங்கியது. இந்த தென்னக ரயில்வேயில் இயக்கப்பட்ட 'போட் மெயில் சர்வீஸ்' என்ற சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தகவல் தொடர்பிறகு பெரும் உதவியாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்கள் சென்றாக வேண்டும் என்பதால் தினமும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளும் சென்று வந்த நிலையில், 'போட் மெயிலுக்காக' தனி பெட்டிகள் இணைக்கப்பட்டன. இலங்கையில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி வரை கப்பல் மூலம் வந்து அங்கிருந்து, 'போட் மெயில்' ரயில் மூலம் சென்னைக்கும், சென்னையிலிருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கும் சென் றனர். கப்பலில் செல்வதற்கான கட்டணமும் ரயில்வே நிர்வாகமே வசூலித்தது.
சென்னை - ராமேஸ்வரம் (விழுப் புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை வழி) ரயில் பாதை சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை, 'மீட்டர் கேஜ்' ஆக இருந்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் ரயில் பயணம் செய்ய பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் - மயிலாடுதுறை வரையிலான 122 கிலோ மீட்டர் தூர 'மீட்டர் கேஜ்' பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாதையில ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகலப் பாதை பணியை கடந்த 2007ம் ஆண்டு ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்.,) நிறுவனம் 270 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கியது. மூன்று பகுதியாக நடந்த இப்பணியில் 31 பெரிய பாலங்கள் உட்பட 380 பாலங்கள், ஆளில்லாத 48 கேட்கள், ஆட்கள் உள்ள 52 கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பாதையில் ரயில் 2009 ஜூன் 30ம் தேதி இயக்கப்படும் என 2007 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த வேலு தெரிவித்தார்.


கொள்ளிடம் பாலம் முடிக்க காலதாமதமானதால் அதே ஆண்டு டிசம்பரில் ஓடும் என்றனர். ஆனால், பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் நீடித்தது. தற்போது ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப் பட்டுவிட்டன. ரயில்வே நிலையங் களும் கம்ப்யூட்டர் மயமாக்கப் பட்டுள்ளன. சிக்னல், கிராசிங் பாயின்ட்கள் என நவீன தொழில்நுட் பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை காலமாக இருப்பதால் பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர மத்திய அரசு பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயங்கும் ரயிலும் இடம் பெறும்.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிம்மதி: நான்கு ஆண்டுகளுக்கு பின், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் இயக்கப்படுவதால் வியாபாரிகள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் நிம்மதியடைந்துள்ளனர். திருச்சி முதல் சென்னை வரை 336 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதை பணி கடந்த எட்டு ஆண் டிற்கு முன்பே 13 மாதங்களில் முடிக்கப்பட்டது. ஆனால், 122 கி.மீ., தூரமேயான விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைக்கு நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதுவும் ரயில்வே நிர்வாகம் இப்பாதையை சவாலாக எடுத்துக் கொண்டு முடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறது.
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் பாதையான விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ரயில் நிறுத் தப்பட்டதால் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அவர்கள் சென்னை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளுக்கு தொழில் ரீதியாக சென்று வருவதற்கும், பொருட்களை கொண்டுவர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அத்துடன் வயது முதிர்ந்தவர்கள் பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் தவித்தனர். சிதம்பரம், வேளாங் கண்ணி மற்றும் தென்மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள், முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதித்தனர். முக்கியமாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கும், வீடு திரும்புவதற்கும் தவியாய்த் தவித்தனர். அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பு மக்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு ரயில் வசதியின்றி தவித்துவந்த நிலையில், தற்போது ரயில் இயக்கப்படுவது அனைவரையும் நிம்மதியடைய செய்துள்ளது.
கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரும் மூலப்பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இறக்கி அங்கிருந்து சாலை மார்க்கத்தில் கொண்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் சென்னையிலிருந்து ரயில் மூலம் எளிதாக கொண்டு வர முடியும். இதனால் நேர விரயத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க முடியும். அதே போன்று இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக முக்கிய துறைமுகங்களுக்கோ அல்லது நாட்டின் பிற பகுதிகளுக்கோ கொண்டு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கட்டணம் எவ்வளவு? விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இன்று காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து ரயில் புறப்படுகிறது. விழுப்புரம் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து எட்டு கோச்சுகளுடன் பயணிகள் ரயில் இன்று காலை 6.10 மணிக்கு புறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் துவக்கி வைக்கின்றனர். பயணிகள் ரயில் நேற்று மாலை பையோ டீசல் இன்ஜினுடன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. மயிலாடு துறையிலிருந்து இயக்க ஒரு டீசல் இன்ஜின் நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் வழியாக காலை 9.50க்கு மயிலாடுதுறை சென்றடையும். இதே போல் முன்னதாக மயிலாடுதுறையிலிருந்து அதிகாலை 5.30க்கு புறப்படும் ரயில் காலை 9.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். பின், விழுப்புரத்திலிருந்து மாலை 6.20க்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 10 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது. இதே போல், மயிலாடுதுறையிலிருந்து மாலை 6.10க்கு புறப்படும் ரயில் இரவு 10 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது.
விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பழைய கட்டணமாக உள்ள 19 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 50 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் உள்ளிட்டப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால், குறைந்த வேகத்திலேயே பயணிகள் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு வரை கட்டணம் குறித்த தகவல் வராததால் ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு செய்யப்படவில்லை. இந்த பாதையில் ஓரிரு நாட்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் ரயில் அவசரமாக இயக்கும் பின்னணி: சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்றுடன் கெடு முடிவதால் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 5ம் தேதி டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எலிப் தர்மராஜ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், டில்லி ரயில்வே துறை செயலக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் நீதிபதிகள் முன் னிலையில் ஆஜராகி மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயிலை இயக்க முடியாது. அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, விரைவில் மயிலாடுதுறை- விழுப்புரம் வழியாக ரயில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.
பின், வழக்கு மீண்டும் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை நேரில் ஆஜராகி உறுதியான வாக்குமூலம் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். 23ம் தேதி நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே அறிவித்த தேதிபடி ரயில் இயக்கவில்லையெனில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என, ரயில்வே அதிகாரிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் பதிவு தபால் மற்றும் தந்தி மூலம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்றுடன்(ஏப்., 23ம் தேதி) ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த கெடு முடிவடைவதால், ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வலியுறுத்திய 'தினமலர்': விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை பணிகளை விரைவாக முடித்து, ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து படங்களுடன் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டது. பணியில் ஏற்படும் கால தாமதம், நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்களின் பாதிப்புகளை 'தினமலர்' தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. 'தினமலர்' நாளிதழின் தொடர் முயற்சி காரணமாக விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் போக்குவரத்து இன்று சாத்தியமாகியுள்ளது.
நன்றி - தினமலர்

Thursday, April 15, 2010

சிறை சென்ற மாணவ வீரர்களுக்குப் பாராட்டு விழா - SFI மயிலாடுதுறை


ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தும் அரசாணை எண்-170ஐ இரத்து செய்யக் கோரி நடத்தியப் போராட்டத்தில் சிறை சென்ற மாணவ வீரர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா 14.04.2010 ஆம் நாள் மயிலாடுதுறை ROA கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர், ஏவிசி கல்லூரித் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன், இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலர் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு சிறை சென்ற மாணவர்களுக்குப் பாராட்டும்முகத்தான் நினைவு பரிசுகளை இந்திய மாணவர் சங்கத்தின் அகிலஇந்திய துணைச் செயலர் தோழர் செல்வா, தமிழ்நாடு மாநிலச் செயலர் தோழர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி இந்திய மாணவர் சங்கப்பொறுப்பாளர் நன்றி கூறினார். இந்த விழாவில் சிறை சென்றதற்ககாப் பரிசு பெற்ற அனைவரும் 18 வயதிற்கும் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. படிப்போம் போராடுவோம் என்பதைத் தாண்டி சிறையும் செல்வோம் என்பது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புத்தம்புதிய செய்தியாக அமைந்திருந்தது. வாழ்த்துவோம் மாணவர்களையும் இந்திய மாணவர் சங்கத்தையும்.
-தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்



மயிலாடுதுறை சந்திப்பில் 15.04.2010 பகல் 12.00 மணியளவில் எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் – ஒளிப்படங்கள் – நெ.நிலவன்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இருந்து வந்த மீட்டர் கேஜ் இரயில்பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 01.11.2006 முதல் தொடங்கியது. இதனால் மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் தெற்கு இரயில்வே சார்பில், மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காலையில் திருச்சியிலிருந்து சோழன் விரைவு வண்டியும் இரவில் காரைக்குடியிலிருந்து கம்பன் விரைவு வண்டியும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கு இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு இரயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்புகளால் மயிலாடுதுறை மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். கடந்த வாரத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஏப்ரல் 15 இரயில்கள் இயக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தள்ளிவைத்தது. ஆனால் நாள் குறித்து உறுதி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் செய்தியாளர் மற்றும் ஒளிப்படப் பதிவாளர் நிலவன் ஆகியோர் இன்று (15.04.2010) காலை 11.30 மணியளவில் மயிலாடுதுறை சந்திப்பு சென்று நிலைய மேலாளர் திரு.கே.பி.பிரபாகரன் அவர்களைச் சந்தித்தோம். இரயில் நிலையத்தில் நடைபெறும் வேலைகளைப் ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்கிறோம். தங்களின் அனுமதி தேவை என்றோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இரயில் எப்போது ஓடும்? ஏன் ஓடவில்லை என்று கேள்வி கேட்டால் நான் பதில் கூறமுடியாது. தெற்கு இரயில்வே பொதுமேலாளர்தான் பதில் செல்லவேண்டும் என்று கூறினார். இரயில் ஓடும் என்ற கனவுகளோடு காத்திருந்த மயிலாடுதுறை மக்கள் தற்போது தங்களின் கனவுகள் நிறைவேறவில்லையே என்ற மனக்குமுறலில் இருக்கிறார்கள் என்று மக்களின் மன உணர்வுகளைத் தெரிவித்து நிலைய மேலாளரிடமிருந்து விடைப் பெற்று ஒளிப்படங்களை எடுத்தோம். ஒளிப்படங்களை எடுத்து முடித்து வெளியே வந்தபோது, இரயில்வேயில் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் அலுவலர் அவர் எதிர்ப்பட்டார். அவர் இரயில்வேயின் முன்னணித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர். என்னிடம் நலம் விசாரித்துவிட்டு, சார் இந்த மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே சூலை மாதம் முதல்தான் இரயில்கள் ஓடும் என்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். அதற்கிடையில் சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு என்றார். ஒருவேளை மக்கள் தொலைக்காட்சியில், மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் முரளி கூறியதுபோல் சென்னைக்குப் பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இரயில்வேயின் உயர்அதிகாரிக்கு, அமைச்சர்களுக்கு இலஞ்சம் கொடுத்திருப்பார்களோ(?) என்ற மனஉளைச்சலோடு மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து விடைபெற்றோம்.

- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

Saturday, April 10, 2010

நேரலை

Watch live streaming video from tamilthinai at livestream.com

Friday, April 02, 2010

தமிழில்அறிவியல் - தொழில் நுட்ப இதழ்கள் - கருத்தரங்கம்




சூரியகதிர் இதழும் - தமிழ்த்திணை இணைய இதழும் இணைந்து நடத்தும்
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் மற்றும்
தமிழ்த்திணை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

நாள் : சூன் திங்கள் 5 மற்றும் 6 ஆம் நாட்களில் (சனி, ஞாயிறு)
இடம் : பொன்கைலாஷ் விடுமுறை இல்ல விடுதி, ஏற்காடு - சேலம்


பேரன்புடையீர், வணக்கம்.
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 3ஆம் கருத்தரங்கம் தமிழில் அறிவியல் - தொழில்நுட்ப இதழ்கள் என்னும் பொருண்மையில் நடைபெறவுள்ளது. இந்தப் பொருண்மையில் கட்டுரை எழுத விரும்புவோர் கட்டுரையில் கணினியில் தட்டச்சு செய்து கட்டுரையை அச்சு வடிவத்திலும் குறுந்தகட்டிலும் (தட்டச்சு செய்யும் எழுத்துருவையையும்) அனுப்பி வைக்கவேண்டும்.
ஒருங்குறியீடு என்னும் Unicode இல் தட்டச்சு செய்வோர் கட்டுரைகளை tamilthinai@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி விடலாம்.
கருத்தரங்கில் கலந்துகொள்ள பேராளர் கட்டணம் ரூ.500/-ஐ ஆசிரியர், தமிழ்த்திணை, 43 - செண்பகம் தெரு, பெசண்ட் நகர், மயிலாடுதுறை - 609 001 என்ற முகவரிக்கு (M.O.) அனுப்பி வைக்கவேண்டும். அதில் பேராளரின் இல்ல முகவரி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகளை அனுப்பி வைக்கவேண்டிய கடைசி நாள் : 15.05.2010
கட்டுரைகளை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க இயலாத பேராளர்கள் பேராளர் தொகை அனுப்பி வைத்து தங்கள் வருகையை உறுதி செய்துகொண்டு, கட்டுரையை நேரடியாகவும் கருத்தரங்கில் அளிக்கலாம். கட்டுரை ஏ4 அளவில் 5 பக்கங்களுக்குள் அமைத்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஆசிரியர், தமிழ்த்திணையைத் தொடர்பு கொள்ளலாம் - அலைபேசி எண் - 9443214142