Thursday, April 15, 2010

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்



மயிலாடுதுறை சந்திப்பில் 15.04.2010 பகல் 12.00 மணியளவில் எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் – ஒளிப்படங்கள் – நெ.நிலவன்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இரயில் இயக்கப்படவில்லை – மயிலாடுதுறை மக்கள் சோகம்

மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே இருந்து வந்த மீட்டர் கேஜ் இரயில்பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 01.11.2006 முதல் தொடங்கியது. இதனால் மயிலாடுதுறை விழுப்புரம் இடையே இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் தெற்கு இரயில்வே சார்பில், மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காலையில் திருச்சியிலிருந்து சோழன் விரைவு வண்டியும் இரவில் காரைக்குடியிலிருந்து கம்பன் விரைவு வண்டியும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கு இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு இரயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்புகளால் மயிலாடுதுறை மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். கடந்த வாரத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஏப்ரல் 15 இரயில்கள் இயக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தள்ளிவைத்தது. ஆனால் நாள் குறித்து உறுதி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் செய்தியாளர் மற்றும் ஒளிப்படப் பதிவாளர் நிலவன் ஆகியோர் இன்று (15.04.2010) காலை 11.30 மணியளவில் மயிலாடுதுறை சந்திப்பு சென்று நிலைய மேலாளர் திரு.கே.பி.பிரபாகரன் அவர்களைச் சந்தித்தோம். இரயில் நிலையத்தில் நடைபெறும் வேலைகளைப் ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்கிறோம். தங்களின் அனுமதி தேவை என்றோம். ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இரயில் எப்போது ஓடும்? ஏன் ஓடவில்லை என்று கேள்வி கேட்டால் நான் பதில் கூறமுடியாது. தெற்கு இரயில்வே பொதுமேலாளர்தான் பதில் செல்லவேண்டும் என்று கூறினார். இரயில் ஓடும் என்ற கனவுகளோடு காத்திருந்த மயிலாடுதுறை மக்கள் தற்போது தங்களின் கனவுகள் நிறைவேறவில்லையே என்ற மனக்குமுறலில் இருக்கிறார்கள் என்று மக்களின் மன உணர்வுகளைத் தெரிவித்து நிலைய மேலாளரிடமிருந்து விடைப் பெற்று ஒளிப்படங்களை எடுத்தோம். ஒளிப்படங்களை எடுத்து முடித்து வெளியே வந்தபோது, இரயில்வேயில் பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் அலுவலர் அவர் எதிர்ப்பட்டார். அவர் இரயில்வேயின் முன்னணித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர். என்னிடம் நலம் விசாரித்துவிட்டு, சார் இந்த மயிலாடுதுறை – விழுப்புரம் இடையே சூலை மாதம் முதல்தான் இரயில்கள் ஓடும் என்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். அதற்கிடையில் சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு என்றார். ஒருவேளை மக்கள் தொலைக்காட்சியில், மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் முரளி கூறியதுபோல் சென்னைக்குப் பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இரயில்வேயின் உயர்அதிகாரிக்கு, அமைச்சர்களுக்கு இலஞ்சம் கொடுத்திருப்பார்களோ(?) என்ற மனஉளைச்சலோடு மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து விடைபெற்றோம்.

- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நெ.நிலவன்

No comments: