Saturday, December 26, 2009

Tuesday, December 15, 2009

மழையில் மயிலாடுதுறை



ம(ழை)யிலாடுதுறை





மழையில் நனைந்த மயிலாடுதுறை






மழையில் நனைந்த மயிலாடுதுறை

Friday, August 28, 2009

மதுரையில் கணினிப் பயிற்சி நடைபெற்றது

மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் இன்று(28.08.09)ஆம் நாள் தமிழ்த் துறையின் சார்பில் கணினித் தமிழ் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் நான்சிபியூலா அவரகள் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் தமயந்தி நன்றி கூறினார். பயிற்சியில் முனைவர் தி.நெடுஞ்செழியன் கலந்து கொண்டார்

Tuesday, March 31, 2009

தமிழ்ப் பேரறிஞர்களுக்குப் பாராட்டு விழா

திருமதி பி.என்.தேவாச்சி அம்மாள் நினைவு அறக்கட்டளையும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியும் இணைந்து நடத்தும்
தமிழ்ப் பேரறிஞர்களுக்குப் பாராட்டு விழா

இடம் : பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல்
தமிழ்க் கல்லூரி, கோவை
நாள் : 08.04.2009 புதன்கிழமை காலை 10 மணி

இவ்வாண்டு சிறப்பு தலைப்பு
கோவை வளர்த்த தமிழ்

வரவேற்புரை : முனைவர் (திருமதி)ம.மனோன்மணி, கல்லூரி முதல்வர்
தலைமை : தவத்திரு மருதாச்சல அடிகளார் இளையபட்டம்
தமிழறிஞர்களுக்குச் சிறப்பு பட்டயம், விருது வழங்கி வாழ்த்துரை
திரு. வ. ஈசுவரமூர்த்தி அவர்கள்
மேநாள் தமிழ்நாடு மேலவை உறுப்பினர், தலைவர், வடமலை மீடியா குரூப்
கல்வி உதவித் தொகை வழங்குதல்
திரு. டாக்டர் ப.குப்புசாமி அவர்கள்
நன்றியுரை : பேரா.ந.துரைசாமி

பாராட்டும் பட்டயமும் பெறும் தமிழ்ப் பேரறிஞர்கள்


டாக்டர் கா.மீனாட்சிசுந்தரம்
டாக்டர் ம.ரா.போ.குருசாமி
அருள்நிதி பேரா.இருசுப்பிள்ளை
புலவர் புவியரசு
புலவர் கோவை ஞானி
கவிஞர் சக்திக்கனல்
திரு. வ.விஜயபாஸ்கரன்
புலவர் தி.சிவகாமி
டாக்டர் தெ.கல்யாணசுந்தரம்
புலவர் சி.இராசியண்ணன்
திரு.என்.உமாதாணு
கவிஞர் ப.குணசேகர்
திரு.மு.வேலாயுதம்
கவிஞர் சூலூர் கலைப்பித்தன்

அன்புடன் அழைக்கிறது
வடமலை மீடியா குரூப்
பிச்சனூர், கோயமுத்தூர் – 641 105

Tuesday, March 24, 2009

தமிழ் முனைவர் பட்ட ஆய்வு

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஏப்ரல் திங்களில் இப்பணியை நிறைவு செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளின் தரவுகளில் சில குறைபாடுககளுடன் கிடைத்துள்ளன.
அந்தத் தரவுகளின் பட்டியலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
அறிஞர் பெருமக்கள் தகவல்கள் தெரிந்தால் சான்றுடன்
முனைவர் தி.நெடுஞ்செழியன்,
தமிழ் இணைப் பேராசிரியர்,
ஏவிசி கல்லூரி மன்னம்பந்தல்,
மயிலாடுதுறை
என்னும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறோம். அல்லது tamilthinai@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

சென்னை பல்கலைக்கழகம்
http://docs.google.com/Doc?id=ddcp73ts_12gj552hc6
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
http://docs.google.com/Doc?id=ddcp73ts_13ftjvjmf2
- நிலவன்

தொல்.திருமாவிற்குத் திறந்த மடல்




விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் மட்டுமல்ல.....தமிழினத்தின் எழுச்சிக்குக் குறிப்பாக ஈழத்தமிழர் ஆதரவு உணர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் உலகத் தமிழர்களின் உள்ளங்களை வென்ற திருமா அவர்களே, வணக்கம்.
ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்க.... அதை ஒருபுறம் தமிழக அரசியல் கட்சிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் 26ஆம் நாள் விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று அறிவிக்க இருக்கிறார். மருத்துவர் ஐயா அதிமுகவோடு கூட்டணி என அறிவிக்க இருக்கிறார் என தமிழ்நாட்டு நாளிதழ்கள் ஆரூடம் சொல்லுகின்றன. எல்லாம் வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது.
தமிழினத் தலைவர் கலைஞர் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி உறுதி என்று கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழர்களுக்குச் செய்த பாவங்களை எல்லாம் சிலுவையாய் சுமக்க கலைஞர் நவீன ஏசுநாதராக மாறிவிட்டார். திமுகவும் தோல்வியைச் சுமக்க தன்னை சித்தமாக்கிக் கொண்டுவிட்டது. இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியில் நீடிக்கும் என்று கலைஞர் அறிவித்தவுடன், பித்தளை மனம் கொண்ட தங்க(?)பாலு விடுதலைச் சிறுத்தைகளை நீக்கவேண்டும் என்றார். காங். தலைவர் டி.சுதர்சனம் ஒருபடி மேலேபோய், அன்னை சோனியா மறப்போம் மன்னிப்போம் என்றால் விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணியில் நீடிக்கலாம் என்றார்.
ஒரு கொள்கைக்கா, இலட்சிய உணர்வுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை அரசியல் எப்படி பாடாய் படுத்துகின்றது என்பதை எண்ணி வேதனை கொள்கிறேன். மாநில கட்சிகளிடம் கையேந்திப் பிச்சையெடுத்து பிரதமர் பதவியில் அமரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி உங்களை மட்டும் ஆணவத்தோடு பார்க்கிறது. என்ன காரணம்? காரணம் இருக்கலாம். நீங்கள் திமுகக் கூட்டணியில் நீடிப்பது உங்கள் முடிவு. காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நீங்கள் எப்படி பிரச்சாரம் செய்யமுடியும்? அதற்காக அதிமுக கூட்டணியில் இணைய முடியுமா? அதுவும் முடியாது என்பது பேரூண்மை. இந்நிலையில் தாங்கள் செய்யவேண்டியது என்ன? என் ஆலோசனையைத் தெரிவிக்கிறேன். பிடித்தால் மகிழ்வேன். பிடிக்கவில்லை என்றால் உங்கள் மீதுள்ள மதிப்பைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்.
ஆலோசனைகள்
1.நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஒருவர் மட்டுமே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சிதம்பரத்தில் மட்டும் போட்டியிடுங்கள். ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவையின் சார்பில் தங்களைப் பொதுவேட்பாளராக ஏற்க ஐயா நெடுமாறன் தலைமையில் அனைத்துக் கட்சிக்கும் வேண்டுகோள் விடுப்போம்.
2.தேர்தலில் போட்டி இல்லையென்றால் ஈழ ஆதரவு கட்சிகளான இந்திய கம்யூ. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகளை ஆதரித்து அக்கட்சிகளின் வெற்றிக்காக சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்.
3.யாரை ஆதரிக்கமாட்டேன். நடுநிலை என்று மட்டும் முடிவு எடுத்துவிட வேண்டாம்.
4.காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பது என்பதை முதல் குறிக்கோளாகத் தாங்கள் கொள்ளவேண்டும்.
5.ஈழத் தமிழர் ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்கான எதிர்நிலை என்ற கோட்பாட்டில் தங்களின் பரப்புரை அமையவேண்டும்.
எந்த முடிவு உங்களின் முடிவு என்பதை ஈழதமிழர் நல்வாழ்வுக்கான சிறந்த முடிவாக தங்களின் முடிவு அமைந்திட வேண்டும் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நன்றி.
நம்பிக்கையுடன் உங்கள் தமிழன்
நிலவன்

Sunday, March 22, 2009

பல்கலைக்கழக மான்யக்குழு விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். நல்லதொரு பல்கலைக்கழகம் என்பதை உலகக் கல்வியாளர்கள் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு சிறந்த செயல்பாடுகள் என்பதில் ஐயமில்லை. எம்.பில். என்னும் ஆய்வியல் நிறைஞர் அல்லது இளமுனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்கள் அங்கீகாரத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு விதித்துள்ள விதிகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாக செயல்படுகிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம். இப்படி செயல்பட பல்கலைக்கழக விதி அல்லது துணைச் சட்டங்கள் வழிவகை செய்கிறதா? என்று பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி இணைப்பேராசிரியர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கேட்டால் ஏதோ ஒரு மழுப்பலான பதிலை அனுப்பி விட்டு பல்கலைக்கழகம் உரிய தகவலை அளிக்க மறுக்கிறது.

14.06.2006ஆம் நாள் பல்கலைக்கழக மான்யக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையில், கல்லூரி ஆசிரியர் பணிக்கு எம்.பில்.மட்டும் முடித்தவர்கள் செலட்/நெட் முடித்திருக்கவேண்டும் என்ற விதியில் திருத்தம் செய்து, செலட்/நெட்டிலிருந்து விலக்களித்து பணிக்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்திருந்தது. மேலும் அவ்வாறு விலக்குபெற்றவர்கள்(எம்.பில் மட்டும் முடித்தோர்) இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் நடத்த வேண்டும் என்றும் செலட்/நெட் முடித்தோர் அல்லது முனைவர் பட்டம் பெற்றோர் முதுநிலை பட்ட வகுப்புகளுக்குப் பாடம் நடத்தலாம் என்றும் அறிவித்திருந்தது.

பல்கலைக்கழக மான்யக்குழு விதிகளின் அடிப்படையில் எம்.பில்.நெறியாளராக ஒருவர் இருக்கவேண்டும் என்றால் அவர் 31.12.1993ஆம் நாளுக்கு முன்பு எம்.பில் முடித்தவராக இருக்கவேண்டும் அல்லது 01.01.1994ஆம் நாள் அல்லது அதற்குப் பின்னர் செலட்/நெட் தேவை என்பதை வலியுறுத்துகிறது. இதனை தன் சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மான்யக்குழு தெளிவாக தெரிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில். நெறியாளர் அங்கீகாரம் வழங்கியதில் உள்ள விதி மீறல்கள்

  1. ஒரு சுயநிதிப் பாடப்பிரிவு ஆசிரியர் 2005ஆம் ஆண்டில் எம்.பில். அங்கீகாரத்தைப் பல்கலைக்கழகத்தில் பெறுகிறார். ஆனால் அந்த ஆசிரியருக்கு 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் பல்கலைக்கழகம் கல்வித் தகுதி ஏற்பு வழங்கி ஆசிரியராக அங்கீகாரம் வழங்குகிறது. ஒருவர் ஆசிரியர் அங்கீகாரம் பெறாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில்.நெறியளராக அங்கீகாரம் பெற முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டப்பட்ட தகவலுக்கு விடையளித்துள்ளது.
  2. பல்கலைக்கழகக் கல்வித் தகுதி பெறாமலே, ஒரு கல்லூரியின் முதல்வரின் பரிந்துரையில் எம்.பில்.நெறியாளர் அங்கீகாரத்தை வழங்குகிறோம் என்று பல்கலைக்கழகம் விதிகளை மதிக்காமல் தகவல்களைத் தருகிறது. சரி, இவ்வாறு எம்.பில்.அங்கீகாரம் வழங்க பல்கலைக்கழகத்தில் விதி உள்ளதா? விதியைச் சுட்டுங்கள் என்றால் நெற்றிக்கண்ணைக் காட்டி சுடுகிறார்கள். விதிகளைச் சுட்ட மறுக்கிறார்கள். வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டு பதில் பேச மறுக்கிறார்கள்.
  3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எம்.பில். பட்டம் தொடர்பான விதி 10.1 என்பது எம்.பில்.நெறியாளர் குறித்து பேசுகிறது. என்னவெனில், ஒருவர் எம்.பில். பட்டம் பெற்று 2 ஆண்டுகள் முதுநிலை பாடம் நடத்திய அனுபவம் பெற்றிருக்கிறார் என்று அந்தந்த கல்லூரி முதல்வர் சான்று வழங்கினால் எம்.பில்.நெறியாளர் அங்கீகாரம் வழங்கப்படும் என்று உள்ளது. எம்.பில். மட்டும் முடித்து, செலட்/நெட் தேர்ச்சி பெறாதவர்கள் எவ்வாறு முதுநிலை பாட அனுபவம் பெறமுடியும்? வழியே இல்லை. பெற்றுள்ளனர் என்று கல்லூரி முதல்வர்கள் சான்றுதருகிறார்கள். நாங்கள் வழங்குகிறோம் என்று பல்கலைக்கழகம் கூறுகிறது என்றால் பல்கலைக்கழக மான்யக்குழு விதியை பல்கலைக்கழகம் மட்டுமல்ல.....கல்லூரி முதல்வரும் மீறுகிறார். பல்கலைக்கழகம் அனுமதிக்கிறது என்பதுதானே அதற்குப் பொருள்.
  4. தற்போது ஒரு பிரச்சனை புதிதாய் கிளம்பியுள்ளது. இதற்குப் பல்கலைக்கழகம் எவ்வாறு பதில் சொல்லப் போகிறது என்பது ஒரு புரியாத புதிர். என்னவெனில், சுயநிதி பாடப்பிரிவில் அல்லது கல்லூரியில் 2006இல் பல்கலைக்கழகக் கல்வித் தகுதிப் பெற்று 2005ஆம் ஆண்டில் எம்.பில். எம்.பில். அங்கீகாரம் பெற்ற ஒருவர்/இருவர் 2008ஆம் ஆண்டில் நிரந்தரப் பணியில் இணைகிறார்கள். பின்னர் இணைந்தவர்களுக்குப் பல்கலைக்கழகம் புதிதாய் கல்வித் தகுதி வழங்குகிறது. 2006ஆம் ஆண்டில் பெற்ற கல்வித்தகுதி தானே இல்லாமல் போகிறது. ஆனால் 2005ஆம் ஆண்டில் பெற்ற எம்.பில்.அங்கீகாரம் மட்டும் இல்லாது போகாது அப்படியே நீடிக்கிறது. இவர்கள் பழைய அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு எம்.பில்.நெறிப்படுத்திக் கொண்டுதான் உள்ளார்கள். பல்கலைக்கழக மான்யக்குழு விதியின்படி 2008ஆம் ஆண்டில் நிரந்தரப் பணியில் இணைந்தவர் எப்படி 2ஆண்டு முதுநிலை அனுபவம் பெற்றிருக்கமுடியும்? இந்தப் பிரச்சனையைப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றால் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்குத் தலைச்சுற்றி பைத்தியம் பிடித்துவிடும் என்பது உறுதி.

உயர்நிலையில் இருப்போர் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப விதிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் திருத்திக்கொண்டும் மனம்போன போக்கில் செயல்படுவதால் பதில் சொல்லமுடியாது தவிப்பது அந்தப் பிரிவைப் பார்க்கும் அலுவலர்கள்தான். மத்தளத்திற்கு இருபக்கம் இடி என்பதுபோல பல்கலைக்கழக அலுவலர்களின் நிலை உள்ளது. பொதுமக்கள் கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உள்ளது. பொதுமக்கள் தகவல் கேட்டால் ஏதாவது ஒரு பதிலை தந்துகொள்ளலாம் என்ற மனநிலையில் பொதுத்தகவல் அலுவலர்கள் உள்ளனர். இது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். விதிகளை, சட்டங்களை மதித்து பல்கலைக்கழகம் நடந்தால், எதற்கு தகவல் அறியும் உரிமைப்படி கேள்விகள்.......? பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிந்திக்குமா?

- நிலவன்

தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு


தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் பெயரில் அரசியல் (நடித்துவரும் மன்னிக்கவும்) நடத்தி வரும் தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரமாய் திகழ்ந்துவரும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இன்று நண்பகல் 2 மணியளவில் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்பரையில் தன்னுடைய கட்சி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டு வைத்துக்கொள்ளாது(அப்படியானால் பொரியல் வைத்துக்கொள்ளுமா என்று நையாண்டி செய்யக்கூடாது) தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் தேமுதிகவிற்கு மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மக்களுடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்த், தன் கட்சி எத்தைனை இடங்களில் போட்டியிடும் என்றும் மக்கள் எத்தனை இடங்களில் போட்டியிடுவார்கள் என்றும் விரைவில் அறிவிப்பார் என்று தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதோடு, விஜயகாந்த் என்று அழைக்கப்படும் கேப்டன் அவர்களின் தனித்து போட்டி என்ற அறிவிப்பை இதயம் மற்றும் உள்ளம் கொண்ட அனைவரும் வரவேற்பார்கள். கட்சி தொடங்கி 100 ஆண்டுகளைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத தைரியம், 60 ஆண்டுகால திமுக, 5முறை முதல்வர் என்ற சிறப்பையுடைய திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக்கு இன்னும் யாராவது வருவார்களா? என்று கன்னத்தில் கையை வைத்து காத்துக் கொண்டிருக்க.....தில்லி காங்கிரஸ் கட்சியின் கெஞ்சலுக்கு மசியாமல், கலைஞர் வருவார் என்று எதிர்பார்க்க.....டாடா...பைபை.....சொல்லி பாரதிய ஜனதாவின் அழைப்பை இலட்சியம் செய்யாது குகையிலிருந்து புறப்படும் சிங்கமாய் களம் புகுந்துள்ள விஜயகாந்த் அவர்களுக்கு நம் வாழ்த்தினைத் தெரிவிப்போம்.(அதுதானே நாகரிகம்)

சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரி 10,000 என்றால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் குறைந்தது 50,000 வாக்குகள் தேமுதிக பெறும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 20,00,000 வாக்குகள் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் 2011இல் அல்லது அதற்கு முன்னர் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்கை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற பெருத்த நம்பிக்கையோடு கைச் சின்னக்காரர்களைக் கைவிட்டு அல்லது கைகழுவி விட்டு களம் புகுந்துள்ளார் விஜயகாந்த். அவரின் அரசியல் கணக்கு செல்லுமா? எடுபடுமா? என்பதற்கு வரும் மே-16 விடை சொல்லும் நாள். ஒரு நாடாளுமன்றம் வென்றாலும் தேமுதிகவிற்கு மாபெரும் வெற்றிதான். ஏனெனில் சொந்தக் காலில் நின்றல்லவா இந்த வெற்றியைப் பெறுவார்கள். வாழ்த்துவோம் முயற்சியை.

- நிலவன்

Saturday, March 14, 2009

கவிதை

சரிக்குச் சரி

நீயும் நினைச்சி

நானும் நினைச்சி

கணக்கு ஆரம்பமாச்சு

உன்னையும் மறந்து

ஊனையும் மறந்து

ஊழியம் செய்ய

தொலைதூரம் செல்கிறேன்

தினம்......தினம்.....

இப்ப

நீயும் மறந்தாச்சி

நானும் மறந்தாச்சி

கணக்குச் சரியா போச்சு.