Sunday, March 22, 2009

பல்கலைக்கழக மான்யக்குழு விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். நல்லதொரு பல்கலைக்கழகம் என்பதை உலகக் கல்வியாளர்கள் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு சிறந்த செயல்பாடுகள் என்பதில் ஐயமில்லை. எம்.பில். என்னும் ஆய்வியல் நிறைஞர் அல்லது இளமுனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்கள் அங்கீகாரத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு விதித்துள்ள விதிகளைப் புறந்தள்ளி தன்னிச்சையாக செயல்படுகிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம். இப்படி செயல்பட பல்கலைக்கழக விதி அல்லது துணைச் சட்டங்கள் வழிவகை செய்கிறதா? என்று பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி இணைப்பேராசிரியர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கேட்டால் ஏதோ ஒரு மழுப்பலான பதிலை அனுப்பி விட்டு பல்கலைக்கழகம் உரிய தகவலை அளிக்க மறுக்கிறது.

14.06.2006ஆம் நாள் பல்கலைக்கழக மான்யக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையில், கல்லூரி ஆசிரியர் பணிக்கு எம்.பில்.மட்டும் முடித்தவர்கள் செலட்/நெட் முடித்திருக்கவேண்டும் என்ற விதியில் திருத்தம் செய்து, செலட்/நெட்டிலிருந்து விலக்களித்து பணிக்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்திருந்தது. மேலும் அவ்வாறு விலக்குபெற்றவர்கள்(எம்.பில் மட்டும் முடித்தோர்) இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் நடத்த வேண்டும் என்றும் செலட்/நெட் முடித்தோர் அல்லது முனைவர் பட்டம் பெற்றோர் முதுநிலை பட்ட வகுப்புகளுக்குப் பாடம் நடத்தலாம் என்றும் அறிவித்திருந்தது.

பல்கலைக்கழக மான்யக்குழு விதிகளின் அடிப்படையில் எம்.பில்.நெறியாளராக ஒருவர் இருக்கவேண்டும் என்றால் அவர் 31.12.1993ஆம் நாளுக்கு முன்பு எம்.பில் முடித்தவராக இருக்கவேண்டும் அல்லது 01.01.1994ஆம் நாள் அல்லது அதற்குப் பின்னர் செலட்/நெட் தேவை என்பதை வலியுறுத்துகிறது. இதனை தன் சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மான்யக்குழு தெளிவாக தெரிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில். நெறியாளர் அங்கீகாரம் வழங்கியதில் உள்ள விதி மீறல்கள்

  1. ஒரு சுயநிதிப் பாடப்பிரிவு ஆசிரியர் 2005ஆம் ஆண்டில் எம்.பில். அங்கீகாரத்தைப் பல்கலைக்கழகத்தில் பெறுகிறார். ஆனால் அந்த ஆசிரியருக்கு 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் பல்கலைக்கழகம் கல்வித் தகுதி ஏற்பு வழங்கி ஆசிரியராக அங்கீகாரம் வழங்குகிறது. ஒருவர் ஆசிரியர் அங்கீகாரம் பெறாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில்.நெறியளராக அங்கீகாரம் பெற முடியும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டப்பட்ட தகவலுக்கு விடையளித்துள்ளது.
  2. பல்கலைக்கழகக் கல்வித் தகுதி பெறாமலே, ஒரு கல்லூரியின் முதல்வரின் பரிந்துரையில் எம்.பில்.நெறியாளர் அங்கீகாரத்தை வழங்குகிறோம் என்று பல்கலைக்கழகம் விதிகளை மதிக்காமல் தகவல்களைத் தருகிறது. சரி, இவ்வாறு எம்.பில்.அங்கீகாரம் வழங்க பல்கலைக்கழகத்தில் விதி உள்ளதா? விதியைச் சுட்டுங்கள் என்றால் நெற்றிக்கண்ணைக் காட்டி சுடுகிறார்கள். விதிகளைச் சுட்ட மறுக்கிறார்கள். வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டு பதில் பேச மறுக்கிறார்கள்.
  3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எம்.பில். பட்டம் தொடர்பான விதி 10.1 என்பது எம்.பில்.நெறியாளர் குறித்து பேசுகிறது. என்னவெனில், ஒருவர் எம்.பில். பட்டம் பெற்று 2 ஆண்டுகள் முதுநிலை பாடம் நடத்திய அனுபவம் பெற்றிருக்கிறார் என்று அந்தந்த கல்லூரி முதல்வர் சான்று வழங்கினால் எம்.பில்.நெறியாளர் அங்கீகாரம் வழங்கப்படும் என்று உள்ளது. எம்.பில். மட்டும் முடித்து, செலட்/நெட் தேர்ச்சி பெறாதவர்கள் எவ்வாறு முதுநிலை பாட அனுபவம் பெறமுடியும்? வழியே இல்லை. பெற்றுள்ளனர் என்று கல்லூரி முதல்வர்கள் சான்றுதருகிறார்கள். நாங்கள் வழங்குகிறோம் என்று பல்கலைக்கழகம் கூறுகிறது என்றால் பல்கலைக்கழக மான்யக்குழு விதியை பல்கலைக்கழகம் மட்டுமல்ல.....கல்லூரி முதல்வரும் மீறுகிறார். பல்கலைக்கழகம் அனுமதிக்கிறது என்பதுதானே அதற்குப் பொருள்.
  4. தற்போது ஒரு பிரச்சனை புதிதாய் கிளம்பியுள்ளது. இதற்குப் பல்கலைக்கழகம் எவ்வாறு பதில் சொல்லப் போகிறது என்பது ஒரு புரியாத புதிர். என்னவெனில், சுயநிதி பாடப்பிரிவில் அல்லது கல்லூரியில் 2006இல் பல்கலைக்கழகக் கல்வித் தகுதிப் பெற்று 2005ஆம் ஆண்டில் எம்.பில். எம்.பில். அங்கீகாரம் பெற்ற ஒருவர்/இருவர் 2008ஆம் ஆண்டில் நிரந்தரப் பணியில் இணைகிறார்கள். பின்னர் இணைந்தவர்களுக்குப் பல்கலைக்கழகம் புதிதாய் கல்வித் தகுதி வழங்குகிறது. 2006ஆம் ஆண்டில் பெற்ற கல்வித்தகுதி தானே இல்லாமல் போகிறது. ஆனால் 2005ஆம் ஆண்டில் பெற்ற எம்.பில்.அங்கீகாரம் மட்டும் இல்லாது போகாது அப்படியே நீடிக்கிறது. இவர்கள் பழைய அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு எம்.பில்.நெறிப்படுத்திக் கொண்டுதான் உள்ளார்கள். பல்கலைக்கழக மான்யக்குழு விதியின்படி 2008ஆம் ஆண்டில் நிரந்தரப் பணியில் இணைந்தவர் எப்படி 2ஆண்டு முதுநிலை அனுபவம் பெற்றிருக்கமுடியும்? இந்தப் பிரச்சனையைப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றால் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்குத் தலைச்சுற்றி பைத்தியம் பிடித்துவிடும் என்பது உறுதி.

உயர்நிலையில் இருப்போர் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப விதிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் திருத்திக்கொண்டும் மனம்போன போக்கில் செயல்படுவதால் பதில் சொல்லமுடியாது தவிப்பது அந்தப் பிரிவைப் பார்க்கும் அலுவலர்கள்தான். மத்தளத்திற்கு இருபக்கம் இடி என்பதுபோல பல்கலைக்கழக அலுவலர்களின் நிலை உள்ளது. பொதுமக்கள் கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உள்ளது. பொதுமக்கள் தகவல் கேட்டால் ஏதாவது ஒரு பதிலை தந்துகொள்ளலாம் என்ற மனநிலையில் பொதுத்தகவல் அலுவலர்கள் உள்ளனர். இது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். விதிகளை, சட்டங்களை மதித்து பல்கலைக்கழகம் நடந்தால், எதற்கு தகவல் அறியும் உரிமைப்படி கேள்விகள்.......? பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிந்திக்குமா?

- நிலவன்

1 comment:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் எல்லா இடங்களிலும் சட்டம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வளைந்து கொடுப்பதாகதான் உள்ளது.