Tuesday, March 24, 2009

தொல்.திருமாவிற்குத் திறந்த மடல்




விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் மட்டுமல்ல.....தமிழினத்தின் எழுச்சிக்குக் குறிப்பாக ஈழத்தமிழர் ஆதரவு உணர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் உலகத் தமிழர்களின் உள்ளங்களை வென்ற திருமா அவர்களே, வணக்கம்.
ஈழத்தில் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்க.... அதை ஒருபுறம் தமிழக அரசியல் கட்சிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் 26ஆம் நாள் விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று அறிவிக்க இருக்கிறார். மருத்துவர் ஐயா அதிமுகவோடு கூட்டணி என அறிவிக்க இருக்கிறார் என தமிழ்நாட்டு நாளிதழ்கள் ஆரூடம் சொல்லுகின்றன. எல்லாம் வெற்றியை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது.
தமிழினத் தலைவர் கலைஞர் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி உறுதி என்று கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழர்களுக்குச் செய்த பாவங்களை எல்லாம் சிலுவையாய் சுமக்க கலைஞர் நவீன ஏசுநாதராக மாறிவிட்டார். திமுகவும் தோல்வியைச் சுமக்க தன்னை சித்தமாக்கிக் கொண்டுவிட்டது. இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியில் நீடிக்கும் என்று கலைஞர் அறிவித்தவுடன், பித்தளை மனம் கொண்ட தங்க(?)பாலு விடுதலைச் சிறுத்தைகளை நீக்கவேண்டும் என்றார். காங். தலைவர் டி.சுதர்சனம் ஒருபடி மேலேபோய், அன்னை சோனியா மறப்போம் மன்னிப்போம் என்றால் விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணியில் நீடிக்கலாம் என்றார்.
ஒரு கொள்கைக்கா, இலட்சிய உணர்வுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை அரசியல் எப்படி பாடாய் படுத்துகின்றது என்பதை எண்ணி வேதனை கொள்கிறேன். மாநில கட்சிகளிடம் கையேந்திப் பிச்சையெடுத்து பிரதமர் பதவியில் அமரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சி உங்களை மட்டும் ஆணவத்தோடு பார்க்கிறது. என்ன காரணம்? காரணம் இருக்கலாம். நீங்கள் திமுகக் கூட்டணியில் நீடிப்பது உங்கள் முடிவு. காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நீங்கள் எப்படி பிரச்சாரம் செய்யமுடியும்? அதற்காக அதிமுக கூட்டணியில் இணைய முடியுமா? அதுவும் முடியாது என்பது பேரூண்மை. இந்நிலையில் தாங்கள் செய்யவேண்டியது என்ன? என் ஆலோசனையைத் தெரிவிக்கிறேன். பிடித்தால் மகிழ்வேன். பிடிக்கவில்லை என்றால் உங்கள் மீதுள்ள மதிப்பைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்.
ஆலோசனைகள்
1.நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஒருவர் மட்டுமே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சிதம்பரத்தில் மட்டும் போட்டியிடுங்கள். ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவையின் சார்பில் தங்களைப் பொதுவேட்பாளராக ஏற்க ஐயா நெடுமாறன் தலைமையில் அனைத்துக் கட்சிக்கும் வேண்டுகோள் விடுப்போம்.
2.தேர்தலில் போட்டி இல்லையென்றால் ஈழ ஆதரவு கட்சிகளான இந்திய கம்யூ. பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகளை ஆதரித்து அக்கட்சிகளின் வெற்றிக்காக சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள்.
3.யாரை ஆதரிக்கமாட்டேன். நடுநிலை என்று மட்டும் முடிவு எடுத்துவிட வேண்டாம்.
4.காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பது என்பதை முதல் குறிக்கோளாகத் தாங்கள் கொள்ளவேண்டும்.
5.ஈழத் தமிழர் ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்கான எதிர்நிலை என்ற கோட்பாட்டில் தங்களின் பரப்புரை அமையவேண்டும்.
எந்த முடிவு உங்களின் முடிவு என்பதை ஈழதமிழர் நல்வாழ்வுக்கான சிறந்த முடிவாக தங்களின் முடிவு அமைந்திட வேண்டும் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நன்றி.
நம்பிக்கையுடன் உங்கள் தமிழன்
நிலவன்

No comments: