Tuesday, November 29, 2011

வரலாற்றை மோசடி செய்யும் மயிலாடுதுறை கிளைஃபிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி

வரலாற்றை மோசடி செய்யும்
மயிலாடுதுறை கிளைஃபிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி

தமிழகத்தின் தொன்மையும் வரலாற்று சிறப்பும் கொண்ட சில ஊர்களில் மயிலாடுதுறையும் ஒன்று. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்கள் இந்தப் பகுதிகளில் கால்நடையாகவே பல ஓலைச் சுவடிகளைச் சேகரித்து தமிழ்மொழிக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார் என்பது வரலாற்று உண்மை.
கடந்த நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, திருவிடைமருதூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளைச் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகளோடு இணைத்து இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி என்று அழைக்கப்படும் என்று அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மணிசங்கர் அய்யர் அவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மயிலாடுதுறை மக்கள் கொதித்து எழுந்து பல அறப்போராட்டங்களை நடத்தினர். தமிழ்த்திணை இணைய இதழ் மயிலாடுதுறையின் வரலாற்று பெருமையைப் பட்டியலிட்டு மயிலாடுதுறை என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதி இருக்கவேண்டும் என்பதை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களுக்குத் தெரிவித்தது. அதன் பலன் மீண்டும் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அறிவிக்கப்பட்டது. இது தற்போதைய வரலாறு.
மயிலாடுதுறையில் 27.11.2011ஆம் நாள் பிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி தன் கிளையைத் தொடங்கியது. இதற்கான அழைப்பிதழ் இரண்டு நாட்களுக்கு முன்பே நகரம் முழுவதும் அஞ்சல் துறையால் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டன. அதில் மயிலாடுதுறை என்பது மைலாடுதுறை என்று குறிப்பிடப்பட்டிருந்து.
நகரில் வைக்கப்பட்ட விளம்பரங்கள்


ஆனால் இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட திறப்புவிழா அழைப்பிதழில் மயிலாடுதுறை என்று சரியாகவே இருந்தது.

இல்லங்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ்

27.11.2011ஆம் நாள் காலை 11.00 மணியளவில் தமிழ்த்திணையின் ஆசிரியர், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் பிரான்சிஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் வாடிக்கையாளர் சேவைமைய எண் – 9486525252 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாங்களின் நிறுவனம் வைத்துள்ள விளம்பரத்தில் மைலாடுதுறை என்று குறிப்பிட்டிருப்பது வரலாற்றை மாற்றம் நோக்கம் கொண்டதாக உள்ளது. மயிலாடுதுறை என்றிருந்த இந்த ஊர் பார்ப்பனர்களின் சமஸ்கிருதமயமாக்கலில் மாயூரபுரம் என்றாகி பின்னர் மாயூரம் என்றாகி பின்னர் 1948இல் மாயவரம் என்று நிலைபெற்றது. மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகவும் 1980இல் மாயவரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.கிட்டப்பா அவர்களின் முயற்சியால் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் இருந்த அரசு 1982ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள் பழந்தமிழ் பெயராகிய மயிலாடுதுறை வழக்கிற்கு வருகிறது என்று அரசாணை வெளியிட்டது. இதன் தொடர்பாக மாயவரத்தில் நடைபெற்ற பெருவிழாவில் இதற்கான ஒரு கல்வெட்டு திறக்கப்பட்டது. அந்த கல்வெட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பில் உள்ளது. அதன் படமும் விளக்கமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

12ஆம் நூற்றாண்டு வரை மயிலாடுதுறை என்றிருந்த பெயர் மாயூரபுரம் என்றாகி, மாயூரம் என மருவி, 18ஆம் நூற்றாண்டில் மாயவரம் எனவும்,
1948-இல் மாயூரம் எனவுமாகி இப்பொழுது மீண்டும் பழந்தமிழ் பெயராகிய மயிலாடுதுறை
என்ற முதற்பெயர் வழக்கிற்கு வருவதையொட்டி
தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர்
மாண்புமிகு திரு.எஸ்.டி.சோமசுந்தரம்,
தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர்
மாண்புமிகு திருமதி கோமதி சீனிவாசன்,
தமிழ்நாடு நிதிதுறை அமைச்சர்
மாண்புமிகு டாக்டர் நாவலர் திரு.இரா.நெடுஞ்செழியன்
பெயர் மாற்றத்தினைச் செயல்முறைப்படுத்த
வள்ளுவராண்டு 2013 தந்துபி, ஆனித் திங்கள் 13-ஆம் நாள் (27.6.1982)
நிகழ்ந்த பெருவிழாவன்று நிறுவப்பட்ட கல்.
திரு. மெய்கண்டதேவன் இஆப,
மாவட்ட ஆட்சித்தலைவர், தஞ்சாவூர்.
வேற்று மாநிலங்களிலிருந்து பிழைப்பு நடத்தவருவோர் தமிழ் அடையாளங்களை மாற்ற நினைப்பது அல்லது அழிக்க நினைப்பது என்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது.

தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன்