Sunday, March 22, 2009

தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு


தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் பெயரில் அரசியல் (நடித்துவரும் மன்னிக்கவும்) நடத்தி வரும் தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரமாய் திகழ்ந்துவரும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இன்று நண்பகல் 2 மணியளவில் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்பரையில் தன்னுடைய கட்சி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டு வைத்துக்கொள்ளாது(அப்படியானால் பொரியல் வைத்துக்கொள்ளுமா என்று நையாண்டி செய்யக்கூடாது) தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் தேமுதிகவிற்கு மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மக்களுடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்த், தன் கட்சி எத்தைனை இடங்களில் போட்டியிடும் என்றும் மக்கள் எத்தனை இடங்களில் போட்டியிடுவார்கள் என்றும் விரைவில் அறிவிப்பார் என்று தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதோடு, விஜயகாந்த் என்று அழைக்கப்படும் கேப்டன் அவர்களின் தனித்து போட்டி என்ற அறிவிப்பை இதயம் மற்றும் உள்ளம் கொண்ட அனைவரும் வரவேற்பார்கள். கட்சி தொடங்கி 100 ஆண்டுகளைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத தைரியம், 60 ஆண்டுகால திமுக, 5முறை முதல்வர் என்ற சிறப்பையுடைய திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக்கு இன்னும் யாராவது வருவார்களா? என்று கன்னத்தில் கையை வைத்து காத்துக் கொண்டிருக்க.....தில்லி காங்கிரஸ் கட்சியின் கெஞ்சலுக்கு மசியாமல், கலைஞர் வருவார் என்று எதிர்பார்க்க.....டாடா...பைபை.....சொல்லி பாரதிய ஜனதாவின் அழைப்பை இலட்சியம் செய்யாது குகையிலிருந்து புறப்படும் சிங்கமாய் களம் புகுந்துள்ள விஜயகாந்த் அவர்களுக்கு நம் வாழ்த்தினைத் தெரிவிப்போம்.(அதுதானே நாகரிகம்)

சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரி 10,000 என்றால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் குறைந்தது 50,000 வாக்குகள் தேமுதிக பெறும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 20,00,000 வாக்குகள் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் 2011இல் அல்லது அதற்கு முன்னர் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்கை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தலாம் என்ற பெருத்த நம்பிக்கையோடு கைச் சின்னக்காரர்களைக் கைவிட்டு அல்லது கைகழுவி விட்டு களம் புகுந்துள்ளார் விஜயகாந்த். அவரின் அரசியல் கணக்கு செல்லுமா? எடுபடுமா? என்பதற்கு வரும் மே-16 விடை சொல்லும் நாள். ஒரு நாடாளுமன்றம் வென்றாலும் தேமுதிகவிற்கு மாபெரும் வெற்றிதான். ஏனெனில் சொந்தக் காலில் நின்றல்லவா இந்த வெற்றியைப் பெறுவார்கள். வாழ்த்துவோம் முயற்சியை.

- நிலவன்

2 comments:

பார்வைகள் said...

தனித்துப்போட்டி நல்ல முடிவுதான். ஆனால்.....போகும் ஆனா போகாது என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது.
தி.நெடுஞ்செழியன்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

தனித்துப் போட்டியிடுவது வரவேற்க தகுந்ததுதான்.காலம் பதில் சொல்லும்.