Sunday, December 19, 2010

பாப்பா உமாநாத் இன்று (17/12/2010)திருச்சியில் காலமானார்- வீரவணக்கம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாப்பா உமாநாத் இன்று திருச்சியில் காலமானார்.தமிழ்த்திணையின் சார்பில் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தினார்.
இவருக்கு வயது 82. திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாப்பா உமாநாத், வயது முதிர்வு காரணமாக காலமானார்.
இவர் திருச்சி அருகே உள்ள திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். தற்போது வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்கத்தில் மாநில பொறுப்பு வகித்து வந்தவர்.
இவரது கணவர் உமாநாத் முன்னாள் எம்பி ஆவார். இவர்களுக்கு கண்ணம்மாள், வாசுகி, நிர்மலா ராணி ஆகிய மூன்று மகள்கள் இருந்தனர். கண்ணம்மாள் கடந்த வருடம் காலமானார்.

மறைந்த பாப்பா உமாநாத் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், இதர கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாப்பா உமாநாத் மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர். பாப்பா உமாநாத் டிசமபர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சியில் காலமானார்.
பொன்மலையில் செயல்பட்டு வந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தொழிற்சங்கப் பணிகளில் சிறு வயது முதலே அவர் துடிப்புடன் ஈடுபட்டு வந்தார். 1946ம் வருடம் தொழிலாளர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, சங்கத்திடல் மைதானத்தில் குண்டடிப்பட்டு தொழிலாளர்களுடன் அவர் இருந்தார்.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட கட்சியில் தனது இளம் வயதிலேயே பாப்பா உமாநாத் தீவிரமாக செயல்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த போது அவருடைய தாயார் லட்சுமி அம்மாள் இறந்த செய்தி வந்தது. கட்சியிலிருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்தால் தான் உங்கள் அம்மாவை பார்க்கலாம் என்று அரசு சொன்னபோது, உறுதியாக மறுத்த வீராங்கனை தோழர் பாப்பா உமாநாத்.
1962ம் ஆண்டு இந்திய - சீன எல்லை மோதலை தொடர்ந்து பாதுகாப்பு கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1973ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாப்பா உமாநாத், கே.பி. ஜானகியம்மாள் முயற்சியால் ஜனநாயக மாதர் சங்கம் துவங்கப்பட்டது. அதன் அமைப்பாளராக பாப்பா உமாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பா உமாநாத் தலைமையில் இயங்கிய ஜனநாயக மாதர் சங்கம், பெண்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து:ம ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக போராடும் போர்க்குணமிக்க அமைப்பாக வளர்த்தெடுத்ததில் பாப்பா உமாநாத்துக்கு பெரும் பங்குண்டு.
1989 ஆம் ஆண்டில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றி மக்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக அவர் விளங்கினார். அவரது மறைவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

பத்திரிக்கை செய்திகளுடன் திருச்சியிலிருந்து நிலவன்

No comments: