Tuesday, March 16, 2010

ஒருமைவகைப் பல்கலைக்கழகம் - எதிர்ப்பு உண்ணாவிரதம் - மயிலாடுதுறை



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட மாணவரணிச் செயலர் திரு.நற்குணன் அவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்களுக்குச் சால்வை அணிவித்துப் போராட்டம் வெற்றியடை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். சுமார் 30 நிமிடங்கள் உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார். திரு.நற்குணன் அவர்களுடன் நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள், மயிலாடுதுறை நகர,ஒன்றியப் பொறுப்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.



ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்,அலுவலர், மாணவர் சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறையில் 16.03.2010 உண்ணாவிரதம் நடைபெற்றது

அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தமிழக அரசு ஒருமைவகைப் பல்கலைக்கழகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அந்த முடிவினைக் கைவிடவும், அதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைக் கலைக்கவும் வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16.03.2010 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, AUT மாநிலத் தலைவர் முனைவர் பெ.ஜெயகாந்தி அவர்கள் தலைமையிலும், தமிழ்நாடு நிதிஉதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கப் பொறுப்பாளர் (ஏவிசி கல்லூரி) இரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, ஞானம்பிகை அரசு பெண்கள் கல்லூரி, தருமபுரம் ஆதினக் கலைக்கல்லூரி, பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி, பூம்புகார் கல்லூரிகளிலிருந்து சுமார் 200 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவர் சங்கங்களின் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி, இந்திய தொழிற்சங்க மைய நாகை மாவட்டச் செயலர் ஆர்.இராமானுசம், சிபிஎம் ஒன்றியச்செயலர் திரு.டி.கணேசன், மயிலாடுதுறை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் திரு.இராயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் திரு.ஸ்டாலின், இந்திய மாணவர் சங்க நாகை மாவட்டச் செயலர் திரு.சிங்கரவேலு, இந்திய மாணவர் பெருமன்றம் சார்ந்த திரு.அருள்ராஜன், இந்தியப் பெருமன்ற நாகை மாவட்டச் செயலர் திரு.சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தஞ்சை மண்டலத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மண்டல இணைச் செயலர் முனைவர் திலகவதி ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.



-மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணைக்காக நிலவன்(சிறப்பு செய்தியாளர்)

No comments: