Monday, May 03, 2010

சமூக விஞ்ஞானி பாவேந்தர் - தமிழ்நாடன், குவைத்



சமூக விஞ்ஞானி பாவேந்தர்

இன்றைய உலகில் மானுட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. அழிக்கப்படும் இயற்கைச் செல்வங்கள், சமநிலையற்ற சமுதாய போக்கு, தொடரும் பெண்ணியப் போராட்டங்கள், அருகிவரும் தனிமனித ஒழுக்கங்கள், பகுத்தறிவில் குறைபாடு என மக்கள் பிரச்சனைகள் பெருகிக்கிடக்கின்றன. சங்கத் தமிழில் மங்காச் செல்வங்களைப் பெற்றிருந்த தமிழ் இலக்கிய உலகத்தில் இன்றைக்கு புதுக்கவிஞர்களின் உலகமாக மாறிவிட்ட நிலையில், அவை வெளிப்படுத்தும் கருத்துக்கள் பெரும்பாலும் தனிமனித உயர்ச்சிக்கானதாகவே உள்ளது. பொதுநோக்கும் சமூகப்பார்வையும் அருகி உள்ளன. ஆனால் இவ்வகை புதுக்கவிதைகளின் ஆரம்ப கால பாவலர் பாவேந்தரின் பாடல்கள் அல்லது கவிதைகள் ஒரு குமுகாயத்தின் வெளிப்பாடாக அதன் உயர்ச்சியினை குறிக்கோளாகவும் உலக மேன்மையை கருவாகவும் கொண்டவை என்றால் மிகையில்லை, அந்த வகையில்
இன்றைக்கும் அவரது கருத்துக்களுக்கான தெவை இருப்பதும் அவரின் கொள்கைகள் உயிரோட்டமாக இருப்பதும் அவரை ஓர் அதிச்சிறந்த சமூக விஞ்ஞானி என்பதன் சான்றுகளாகும்.

ஒரு குமுகாயத்தின் அடையாளம், பண்பாடு, வரலாறு என்பன அவர்களின் மொழியும் அதன் தன்மையினையும் சார்ந்ததாகும். அந்த வகையில் ஒரு படைப்பாளனாக தனது மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பெருமைகள் சிறப்புக்களை தனது பாட்டில் வடித்த பெருமைகொண்டவர் பாவேந்தர்.

தமிழின் இனிமை என்ற பாட்டில், தனது நாவிற்கினிய சுவைகள் பல உண்டெனினும் தமிழே எனதுயிர் என்பார். தமிழின் சுவையில் தனது தாய் தந்தை உள்ளிட்ட சுற்றம் கூட அயலவராகுவதாக் கூறுகின்றார். அறுசுவை உணவுகள் உன்னை
வளர்த்தாலும் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்று அதன் உச்சத் தகுதியினை உவப்பாய் எடுத்தியம்புகிறார். இன்றைய நவீனக்
கவிஞர்கள் தமிழை தமிழாகக் கூட உச்சரிக்கத் தயங்குவதோடு, அதன் தொன்மையினையும் சிறப்பியல்புகளையும் இலக்கிய
இலக்கண மரபுகளையும் கூட அறியாதவர்களாயிருப்பது கொடுந்துயரேயாகும்.

வேற்றுமையில் ஒன்றுமை கண்டதாகக் கூறுவர், ஆனால் இன்றோ தமிழர்கள் ஒன்றுமையின்றி வேறாயுள்ளனர்.

சாதி மதங்களில் வேற்றுமை கணட இனம் தமிழினமாகத்தான் இருக்கும். கட்சி மாயையிலும் பதவி பேரத்திலும் மயங்கி சகோதரர்களையே
விரோதிகளாக பாவிக்கும் குணம் தமிழர்களின் பொது குணமானதும், வாழுமிடங்களிலெல்லாம் வதைபடுவதும், சென்ற
இடமெல்லாம் செல்லாக்காசாகியதற்குமான காரணத்தை பாவேந்தர் கீழ்கண்டவரிகளால் அறியத்தருகிறார்.

‘இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் -
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினிலே
தூய்மை யுண்டாகிவிடும்; வீரம் வரும்!
(பாடல்: தமிழ்ப்பேறு).

ஆட்சியாளர்களிடம் மாற்றம் வரும், மக்கள் மனங்களில் மாற்றம் வரும் நாளே தமிழ் வழிக்கல்வியின் வெற்றி நாளாகும், தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களே சிந்திப்பீர்.

நமது தாய் மொழியாம் தமிழ் மொழி வளர, தமிழர் நாம் உயர்வோம் என்ற வகையில் பாவேந்தர் கூறும் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளாவன,

எளிய நடையில் நல்லத் தமிழ் நூல்களைப் படைத்திட வேண்டுகிறார், பின் நவீனத்துவவாதிகளின் முன் உரைக்கவேண்டும்.
உலக அறிவனைத்தையும் அருமைத் தமிழில் படைக்க கூறுகிறார், தமிழர் அனைவரும் ஏழை பாழைகளும் படித்திட வகை செய்ய வேண்டுமென்கிறார்,
கல்வித் தந்தைகளில் காதுகளை எட்டுமா, பாவேந்தரின் பரிவு.

தமிழ் நூல்களையே ஆங்கிலத்தில் படிக்கும் இன்றை தமிழரிடம், பிற மொழி நூல்கள் அனைத்தும் தமிழில் எட்ட விழைகிறார்.

“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந் தோமில்லை
தகத்த் காயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.” என்ற வரிகள் வெற்றுப் பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்களுக்கு விழும் சவுக்கடிகள்தாம்.

இவ்வாறாக தமிழ் மொழியினையும் தமிழர்களையும் போற்றிய பாவேந்தர் அவர்கள்,

தனது பாடல்களில் இயற்கையைப் பாடுகிறார், காதலை வெளிப்படுத்துகிறார், பெண்ணைப் போற்றுகின்றார் புதிய உலகம் காண புறப்பட்டார்,
நாட்டிற்குழைத்த பெரியோரை பெரியாரைப் பாடுகின்றார். இத்தகைய கருத்துக்கள் இவரின் பாடல்களிலே ஓங்கி நிற்பதும், படிபோர் மனதில்
வீரத்தினை விதைத்து அறிவினை பெருக்கி உணர்ச்சிகளை தூண்டுவதாக உள்ளதும் இன்றைய உலக போக்கிற்கு பெரும் பொருத்தப்பாட்டோடு
பயனளிப்பதும், அதன் நோக்கு போக்கினை அறிந்து அதற்கான மருந்தினையும் வழங்குவதைக் காணும்போது பாவேந்தர் அவர்கள் மாபெரும் சமூக விஞ்ஞானி என்பதும், காலத்தால் அழியா அவரின்
பாடல்கள் தமிழின் மாபெரும் செல்வங்கள் என்பதும் திண்ணம்.
வாழ்க பாவேந்தர் புகழ்! வளர்க அவர்தம் கொள்கைகள்! வெல்க தமிழினம்!

தமிழ்நாடன்
குவைத்
29.04.2010

No comments: