Saturday, October 23, 2010

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு வீர வணக்கம்!

அந்தோ, நம் அறிவாயுதம் ஒன்று பறிக்கப்பட்டதே!
பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் மறைவுக்கு தமிழ்த்திணையின் வீர வணக்கம்!



கழகத்தின் அறிவு ஆயுதங்களில் ஒன்று இன்று (22.10.2010) மாலை இயற்கையின் கோணல் புத்தி காரணமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது கொடுமை! கொடுமையிலும் கொடுமை!

கோவை தந்த கொங்கு அறிஞர், பெரியார் பெருந்தொண்டர், பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் திடீர் மறைவு நம்மை திடுக்கிட வைத்ததோடு, சொல்லொணாத் துயரத்தில் தள்ளியுள்ளது!

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு பெரியார் திடலில் உடல்நலக் குறைவு (விடியற்காலையில்) ஏற்பட்டவுடன் நமது தோழர் கள் கலி. பூங்குன்றன், சீதாராமன் முதலியோர் ஒரு பிரபல மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்து ஓரளவு நலம் பெற்றுத் திரும்பினார். அவர் கோவைக்கே சென்று நிரந்தரமாகத் தங்க முடிவு செய்து - என்னிடம் அனுமதி கேட்பதுபோல் சொன்னார். நான் உங்கள் உடல்நலம்தான் முக்கியம்; அவசியம் அதுபோலவே செய்யுங்கள்; அங்கிருந்தே எழுத்துப் பணி செய் யுங்கள் என்று கூறி கோவைக்கு அனுப்பினோம்.

அங்கிருந்து சில நாள்களுக்கு முன்தான் சென்னைக்குத் திரும்பினார் - அவரை, அவரின் துணைவியாரும், மகளும் பெரியார் திடலில் சந்தித்துவிட்டு, விடைபெற்று நேற்று (22.10.2010) இரவுதான் கோவைக்கு திரும்பினர்.

இன்று பகல் என் வாழ்விணையர் மற்றும் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். நான் உள்ளே பணியில் இருந்தேன். ஜனவரி பொங்கல்வரை - உலக நாத்திகர் மாநாடு வரை நான் பணியாற்றிவிட்டு, பிறகு கோவைக்குச் சென்று தங்குவேன் என்று கடமை உணர்வோடு சொல்லி, பெரியார் திடலில் தங்கியவருக்கு இன்று (22.10.2010) மாலை 6.30 மணிக்கு திடீர் என்று உடல்நலக் குறைவு; மருத்துவமனைக்கு செல்லு முன்பே மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்ற வேதனையான செய்தி திடலில் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் கிடைத்தது; அதிர்ந்து போனோம். கழகக் குடும்பத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலை அழுத கண்ணீரோடு தெரிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

அயராத எழுத்துப் பணி, சிறப்பான பேச்சாற்றல், ஆழமான சிந் தனை வளம், அடக்கம் மிகுந்த பண்பின் குடியி ருப்பு, ஏராளம் படித்தும் தன் முனைப்பற்ற பல் திறன் அடங்கிய கொள்கலன் அவர்.

அவரது மறைவு அவரது குடும்பத் தினருக்கு - துணைவியார் பிள்ளைகள், உறவினர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் கழகத்திற்கு - குறிப்பாக நமக்கு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தொண்டின் தூய உருவமான அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரது துணைவியார், பிள்ளைகள் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

மானமிகு துரை. சக்ரவர்த்தி, பேராசிரியர் இராமநாதன், பேராசிரியர் இறையன் போன்றவர் களை இழந்த நிலையில், மேலும் இப்படி ஓர் இழப்பா! தாங்க இயலாத உள்ளத்தோடு உள்ளேன். பகுத்தறிவுவாதிகள் தாங்கித்தானே ஆக வேண்டும்? வேறு வழி இல்லையே!


தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
22.10.2010

நன்றி - விடுதலை

No comments: