Monday, October 11, 2010

மறைந்தார் திருச்சி எம்.எஸ்.வெங்கடாசலம்(10.10.10)



திருச்சிராப்பள்ளி எம்.எஸ்.வெங்கடாசலம்(75) இன்று(10.10.10) காலை 5.30 மணியளவில் திருச்சியில் இயற்கை எய்தினார். திரு.எம்.எஸ்.வெங்கடாசலம் அவரகள் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய Homeland, திராவிடநாடு இதழ்களின் துணைஆசிரியராகப் பணியாற்றியப் பெருமைக்குரியவர். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபம் பண்புடையவர். சிறந்த மொழிப்பெயர்ப்பாளர். கம்பராமாயணத்தின் 2000 பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்தது எனப் பிரேமாநந்தக்குமார் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். பாரதிதாசன் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அண்ணா இருக்கையில் ஆலோசகராகவும் தற்சமயம் பணியாற்றியவர். திருச்சி மாவட்ட திமுக செயலராக இருந்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு உடல்நலம் குன்றிய நிலையிலும் இவர் எழுதிய நான் கண்ட அண்ணா என்னும் நூல் வெளிவருவதற்கு முன்பே தமிழ்த்திணையில் மின்நூலாக வெளிவந்தது என்பது மின்நூல் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததாகும்.தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர் என்பதும் இவரின் தனிச்சிறப்பாகும்.பேரறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் அவர்களுடன் இணைந்து எம்.எஸ்.வி.அண்ணா பேரவை என்னும் இலக்கிய அமைப்பைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து பல ஆண்டுகாலம் நடத்திவந்தார்.
தமிழ்த்திணை சார்பில் அதன் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் இயற்கை எய்திய அய்யா எம்.எஸ்.வி. அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தமிழக அமைச்சர்கள் மாண்புமிக கே.என்.நேரு, என்.செல்வராசு, மறுமலர்ச்சி திமுக முன்னணித் தலைவர் திருச்சி மலர்மன்னன் மற்றும் திராவிட இயக்கம் மற்றும் தமிழ் அமைப்பு சார்ந்த பலர் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். அன்று மாலை 5.30 மணியளவில் திருச்சி புத்தூரிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. காவேரி தென்கரையில் உள்ள ஓயாமாரி இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த்திணையின் பால் மாறா அன்புகொண்ட எம்.எஸ்.வி.யின் புகழ் ஓங்கு என்று உரக்க முழக்கமிடுவோம்.

-தமிழ்த்திணைக்காக திருச்சியிலிருந்து நிலவன்

1 comment:

முனைவர் மு.இளங்கோவன் said...

திரு.வெங்கடாசலம் ஐயாவின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி