Tuesday, October 05, 2010
தீண்டாமைக் காவல்துறையை இழுத்துப்பூட்டும் போராட்டம் - 02.10.10 - திருச்சிராப்பள்ளி - பெரியார் திராவிடர் கழகம்.
தமிழ்நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புபிரிவின் திருச்சி அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 இளைஞர்கள் கைதாயினர். திருச்சி வேர் அவுஸ் கிறிஸ்தவக் கல்லறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திருச்சி பழையகோவில் பங்குக்கு உட்பட்ட பகுதிகளான உப்புப்பாறை, செங்குளம் காலனி, சத்தியமுர்த்தி நகர் பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாயினர். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளின் தோழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி உள்ளனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபம், சௌடீஸ்வரி மண்டபம், பீமநகர் பாலாஜி மண்டபம், கே.கே. நகர் காவல்துறை சமுதாயக்கூடம் ஆகிய மண்டபங்களில் கைதான தோழர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். மண்டபங்களில் இடம் இல்லாததால் திருச்சி நகரைத் தாண்டி தோழர்களை அழைத்துச்சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டது போலீஸ். கைது கிடையாது, வீட்டுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்பினர். தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் போராடியபிறகு புதிது புதிதாக மண்டபங்களை தேர்வுசெய்து அவற்றில் தோழர்களை அடைத்தனர். பீம நகர் பகுதியிலும் கருமண்டபம் பகுதியிலும் தோழர்கள் தங்களை அவசியம் கைது செய்யவேண்டுமென வலியுறுத்தி நடுரோட்டில் மறியல் செய்யத் தொடங்கிய பிறகே அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைது எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட உளவுத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர்.
தகவல் மற்றும் ஒளிப்படங்கள் - தாமரை மற்றும் அரசெழிலன்(மின்னஞ்சல் வழி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment