Sunday, March 07, 2010

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை- மயிலாடுதுறை (07.03.2010)




ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலர் உ.வாசுகி சிறப்புரை

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 07.03.2010 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் ஜனநாயக மாதர் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உலக மகளிர் தினம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு ஜி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். பி.புவனேஸ்வரி மற்றும் எல்.பி.வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்.தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஆர்.பத்மாசினி நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் உ.வாசுகி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் உரையின் சில பகுதிகள் :
உலகப் பெண்கள் தினம் என்பது போராடிப் பெற்றதாகும். 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்ற அடிப்படையில் மே தினத்தைப் பெற்றோம். அதுபோலவே பெண்களின் உரிமைக்காகவும் நாம் போராடி உரிமைகளைப் பெற்ற நாள்தான் மார்ச் 8. நம் பணிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதில் யாரும் சலிப்படைய வேண்டிய தேவையில்லை. நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம். நம் கோரிக்கைகள் இன்று அல்ல, நாளை அல்ல, நாளை மறுநாள் என்று என்றாவது ஒருநாள் நிறைவேற்றப்படும். அந்த நம்பிக்கைகளோடு தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருப்போம்.
இன்றைக்கு எல்லா நிலைகளிலும் போராடி வாழ்ந்து வரும் பெண்களுக்குப் பிரச்சனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்குப் போராட்டங்களைத் திட்டமிட்டிருக்கிறோம்.
1.விழுப்புரத்தில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவியை ஒரு இளைஞர் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். இதனை அந்தப் பெண் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். பெற்றோர் அந்த இளைஞரின் பெற்றோரிடம் முறையிட, அந்த இளைஞர் பின்னால் சுற்றுவதை நிறுத்தி இருக்கிறார். ஒரு வாரம் கழித்து அந்த இளைஞர் அந்தப் பெண்ணை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்த, அந்தப் பெண்ணின் குடும்பத்தார் அதே ஊரில் வேறு தெருவிற்கு மாறிவிட்டார்கள். இந்நிலையில் தன்னை ஏற்க மறுத்த அந்தப் பெண்ணை பழிவாங்கும் நோக்கத்துடன், அம்மா, அப்பாவுடன் வீட்டிற்குள் இருந்த அந்த பெண்ணின் மீது திராவகம் என்னும் ஆசிட்டை வீசி இருக்கிறான். அந்தப் பெண்ணின் குடும்பம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 மாதங்கள் உள்நோயாளியாக இருந்து மனஉளைச்சலோடு சிகிச்சை பெற்றுவந்தனர். தற்போது அந்த பெண் எம்.ஏ.,எம்.பில். முடித்திருக்கிறார். அந்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை. அந்தப் பெண் பெங்களூரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, என் முகத்தை நான் கண்ணாடியில் பார்ப்பது இல்லை. எனக்குத் துன்பம் செய்தவன் சிறையில் இருக்கிறான். ஆனால் படித்து முடித்துள்ள எனக்கு என் முகத்தால் வேலை கிடைக்கவில்லை என்றாள். இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சைக்கான உதவிகளையும் அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு வேலைவாய்ப்புகளை தர தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார்.
2. உயர்சாதி பெண்கள் தாழ்த்தப்பட்டசாதி ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால் உயர்சாதி சமூகத்தவர் அவர்களைக் கொன்றுவிட சமூக ஆணை பிறப்பிக்கின்றார்கள். மகாராஷ்டத்தில் இப்படி ஒரு பெண் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவளின் அண்ணன் இந்தப் பெண்ணின் மாமனார், மாமியார், கணவர் மற்றும் அவர் நண்பர் என 4 பேரை கொலை செய்துவிடுகிறார். 8 மாத கர்ப்பிணியான அந்தப் பெண் சோதனைக்காக மருத்துவமனை சென்ற நேரத்தில் இந்த கொலைகள் நடந்து முடிகின்றன. உயர்சாதி பெண்ணின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் அந்த தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. உயர்சாதி இளைஞர் அவமானம் தாங்கமுடியாமல் செய்த இந்த குற்றம் திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அந்த பெண் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. 8மாத கர்ப்பிணியாக இருந்த நான் கொலை செய்யப்படவில்லை. அப்பாவின் முகத்தைப் பார்க்காத என் குழந்தைக்கு இப்போது 3 வயது. நான் இதுவரை கொலை செய்யப்படவில்லை. உயர்சாதி இளைஞனின் உணர்வுகளை மதித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்ட சாதியில் மணம் முடித்துக் கொண்ட என் மன உணர்வுகளை மதிக்கவில்லை என்றாள். இதுபோன்ற சமூகங்கள் நடத்தும் கொலைகளைத் தடுக்க புதிய சட்டங்கள் இயற்றவேண்டும் என்றார்.
3. பெண்களைக் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, ஆண்கள் கைவிடும் போக்கும் இப்போது அளவுக்கு அதிகமாகி வருகின்றது. இதற்கு காரணம், இதுபோன்ற தவறுகளுக்கு ஆண்கள் நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை 600 ரூபாய் அபராதம் என்ற நிலை உள்ளது. இதனால் ஆண்களிடம் பெண்களை ஏமாற்றும் போக்கு அதிகமாகி வருகிறது. இதனைத் தடுக்க சிறைத் தண்டனையை அதிகமாக்கவும், அபராதத் தொகையை அதிகமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், அதிகரித்து வரும் விலைவாசி, பெட்ரேல் டீசல் விலை உயர்வு, மரபணு நீக்கம் செய்யப்பட்ட கத்தரிக்காய், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சமூக பிரச்சனைச் சுட்டிக் காட்டி சிறப்புரையாற்றினார்.

2 comments:

பார்வைகள் said...

ஜனநாய மாதர் சங்கப் பொதுச்செயலர் வணக்கத்திற்குரிய உ.வாசுகி அவர்களின் சிறப்புரை படித்தேன். சமூக அக்கறையுடன் அவர் உரை அமைந்திருந்தது என்பது தனிச்சிறப்பு. பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் உ,வாசுகி அவர்களைப் பாராட்டுவோம்
- நெ.நிலவன்

பார்வைகள் said...

பெண்கள் முன்னேற்றத்திற்கான முழுமையான சிந்தனைகளைத் தன் சிறப்புரையில் தெரிவித்துள்ள ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலர் உ,வாசுகி அவர்களுக்கு பெண்ணினத்தின் சார்பில் நெஞ்சார்ந்த, இதயமார்ந்த நல்வாழ்த்துகள்

- நெ.யாழினி