Monday, May 31, 2010

ஏவிசி கல்லூரி - புதிய முதல்வர்(பொ) - பேராசிரியர் ஆர்.ஞானசேகரன்


மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் புதிய பொறுப்பு முதல்வராக வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர்.ஞானசேகரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர்(பொ) ஆர்.ஞானசேகரன் அவர்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் சொ.செந்தில்வேல் சால்வை, சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கல்விசார அலுவலர்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் ஆர்.ஞானசேகரன் பேசும்போது, நான் ஏற்றுக் கொண்டுள்ள இந்தப் பொறுப்பின் மூலம் கல்லூரி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து தரப்பினரும் நல்லாதரவு வழங்கிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறையிலிருந்து தமிழ்த்திணையின் சிறப்பு செய்தியாளர் நெ.நிலவன்

Wednesday, May 26, 2010

கல்வி வணிகர்களுக்குச் சாட்டையடி - நெல்லை ஜாஸ்மின் சாதனை




கல்வி வணிகர்களுக்கும், கல்விக்காக பணத்தைத் கொட்டியழும் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை

நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்

பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.
படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே,கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத் தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-

மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள்குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்குஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சிஅளிக்கப்படுகிறது.நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்

நன்றி - மாலைமலர்

Monday, May 10, 2010

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் - உண்ணாவிரதம் - சென்னை(06.05.2010)


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில், நிதியுதவி பெறும் கல்லூரிகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கோடுகளைக் கண்டித்தும், ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் மீது நடைபெற்றுவரும் பணிநீக்கம், பணிஇடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை நிதியுதவி பெறும் கல்லூரிகள் கைவிடக் கோரியும் உண்ணாவிரதம் 06.05.2010ஆம் நாள் சென்னையில் உள்ள பின்னி இணைப்புச் சாலையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பெ.ஜெயகாந்தி தலைமை வகித்தார். மூட்டா பொதுச்செயலர் விவேகானந்தன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பொதுச்செயலர் முனைவர் பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.கா.மணி கலந்துகொண்டு உரையாற்றினார். மாலையில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி இலதா அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து நிறைவுரையாற்றினார்.

Monday, May 03, 2010

சமூக விஞ்ஞானி பாவேந்தர் - தமிழ்நாடன், குவைத்



சமூக விஞ்ஞானி பாவேந்தர்

இன்றைய உலகில் மானுட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன. அழிக்கப்படும் இயற்கைச் செல்வங்கள், சமநிலையற்ற சமுதாய போக்கு, தொடரும் பெண்ணியப் போராட்டங்கள், அருகிவரும் தனிமனித ஒழுக்கங்கள், பகுத்தறிவில் குறைபாடு என மக்கள் பிரச்சனைகள் பெருகிக்கிடக்கின்றன. சங்கத் தமிழில் மங்காச் செல்வங்களைப் பெற்றிருந்த தமிழ் இலக்கிய உலகத்தில் இன்றைக்கு புதுக்கவிஞர்களின் உலகமாக மாறிவிட்ட நிலையில், அவை வெளிப்படுத்தும் கருத்துக்கள் பெரும்பாலும் தனிமனித உயர்ச்சிக்கானதாகவே உள்ளது. பொதுநோக்கும் சமூகப்பார்வையும் அருகி உள்ளன. ஆனால் இவ்வகை புதுக்கவிதைகளின் ஆரம்ப கால பாவலர் பாவேந்தரின் பாடல்கள் அல்லது கவிதைகள் ஒரு குமுகாயத்தின் வெளிப்பாடாக அதன் உயர்ச்சியினை குறிக்கோளாகவும் உலக மேன்மையை கருவாகவும் கொண்டவை என்றால் மிகையில்லை, அந்த வகையில்
இன்றைக்கும் அவரது கருத்துக்களுக்கான தெவை இருப்பதும் அவரின் கொள்கைகள் உயிரோட்டமாக இருப்பதும் அவரை ஓர் அதிச்சிறந்த சமூக விஞ்ஞானி என்பதன் சான்றுகளாகும்.

ஒரு குமுகாயத்தின் அடையாளம், பண்பாடு, வரலாறு என்பன அவர்களின் மொழியும் அதன் தன்மையினையும் சார்ந்ததாகும். அந்த வகையில் ஒரு படைப்பாளனாக தனது மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பெருமைகள் சிறப்புக்களை தனது பாட்டில் வடித்த பெருமைகொண்டவர் பாவேந்தர்.

தமிழின் இனிமை என்ற பாட்டில், தனது நாவிற்கினிய சுவைகள் பல உண்டெனினும் தமிழே எனதுயிர் என்பார். தமிழின் சுவையில் தனது தாய் தந்தை உள்ளிட்ட சுற்றம் கூட அயலவராகுவதாக் கூறுகின்றார். அறுசுவை உணவுகள் உன்னை
வளர்த்தாலும் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்று அதன் உச்சத் தகுதியினை உவப்பாய் எடுத்தியம்புகிறார். இன்றைய நவீனக்
கவிஞர்கள் தமிழை தமிழாகக் கூட உச்சரிக்கத் தயங்குவதோடு, அதன் தொன்மையினையும் சிறப்பியல்புகளையும் இலக்கிய
இலக்கண மரபுகளையும் கூட அறியாதவர்களாயிருப்பது கொடுந்துயரேயாகும்.

வேற்றுமையில் ஒன்றுமை கண்டதாகக் கூறுவர், ஆனால் இன்றோ தமிழர்கள் ஒன்றுமையின்றி வேறாயுள்ளனர்.

சாதி மதங்களில் வேற்றுமை கணட இனம் தமிழினமாகத்தான் இருக்கும். கட்சி மாயையிலும் பதவி பேரத்திலும் மயங்கி சகோதரர்களையே
விரோதிகளாக பாவிக்கும் குணம் தமிழர்களின் பொது குணமானதும், வாழுமிடங்களிலெல்லாம் வதைபடுவதும், சென்ற
இடமெல்லாம் செல்லாக்காசாகியதற்குமான காரணத்தை பாவேந்தர் கீழ்கண்டவரிகளால் அறியத்தருகிறார்.

‘இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் -
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினிலே
தூய்மை யுண்டாகிவிடும்; வீரம் வரும்!
(பாடல்: தமிழ்ப்பேறு).

ஆட்சியாளர்களிடம் மாற்றம் வரும், மக்கள் மனங்களில் மாற்றம் வரும் நாளே தமிழ் வழிக்கல்வியின் வெற்றி நாளாகும், தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களே சிந்திப்பீர்.

நமது தாய் மொழியாம் தமிழ் மொழி வளர, தமிழர் நாம் உயர்வோம் என்ற வகையில் பாவேந்தர் கூறும் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளாவன,

எளிய நடையில் நல்லத் தமிழ் நூல்களைப் படைத்திட வேண்டுகிறார், பின் நவீனத்துவவாதிகளின் முன் உரைக்கவேண்டும்.
உலக அறிவனைத்தையும் அருமைத் தமிழில் படைக்க கூறுகிறார், தமிழர் அனைவரும் ஏழை பாழைகளும் படித்திட வகை செய்ய வேண்டுமென்கிறார்,
கல்வித் தந்தைகளில் காதுகளை எட்டுமா, பாவேந்தரின் பரிவு.

தமிழ் நூல்களையே ஆங்கிலத்தில் படிக்கும் இன்றை தமிழரிடம், பிற மொழி நூல்கள் அனைத்தும் தமிழில் எட்ட விழைகிறார்.

“எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந் தோமில்லை
தகத்த் காயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.” என்ற வரிகள் வெற்றுப் பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்களுக்கு விழும் சவுக்கடிகள்தாம்.

இவ்வாறாக தமிழ் மொழியினையும் தமிழர்களையும் போற்றிய பாவேந்தர் அவர்கள்,

தனது பாடல்களில் இயற்கையைப் பாடுகிறார், காதலை வெளிப்படுத்துகிறார், பெண்ணைப் போற்றுகின்றார் புதிய உலகம் காண புறப்பட்டார்,
நாட்டிற்குழைத்த பெரியோரை பெரியாரைப் பாடுகின்றார். இத்தகைய கருத்துக்கள் இவரின் பாடல்களிலே ஓங்கி நிற்பதும், படிபோர் மனதில்
வீரத்தினை விதைத்து அறிவினை பெருக்கி உணர்ச்சிகளை தூண்டுவதாக உள்ளதும் இன்றைய உலக போக்கிற்கு பெரும் பொருத்தப்பாட்டோடு
பயனளிப்பதும், அதன் நோக்கு போக்கினை அறிந்து அதற்கான மருந்தினையும் வழங்குவதைக் காணும்போது பாவேந்தர் அவர்கள் மாபெரும் சமூக விஞ்ஞானி என்பதும், காலத்தால் அழியா அவரின்
பாடல்கள் தமிழின் மாபெரும் செல்வங்கள் என்பதும் திண்ணம்.
வாழ்க பாவேந்தர் புகழ்! வளர்க அவர்தம் கொள்கைகள்! வெல்க தமிழினம்!

தமிழ்நாடன்
குவைத்
29.04.2010